அச்சுறுத்தலுக்கு அடிபணியாத சவுதி; ரியாத் விமான நிலையம் மீண்டும் திறப்பு

​ரியாத்: ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தொடர் டிரோன், ஏவுகணைத் தாக்குதல் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் பகுதிநேரமாக மீண்டும் செயல்படத் துவங்கியது.

​ஏமனில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியா மீது தீவிர வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கடந்த அக்., 10ல் இந்த விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலில் 13 பேர் பலியாகினர். கடந்த 10 ஆண்டுகளில் சவுதி சந்தித்த மிக மோசமான தாக்குதலாக இது அமைந்தது. இதையடுத்து, விமான சேவைகள் அனைத்தும் அதிரடியாக முடக்கப்பட்டன.

மீண்டும் இயக்கம்:

இந்நிலையில், கடுமையான பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் ரியாத் விமான நிலையம் பகுதிநேரமாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அங்குள்ள முனையம் 1ல் உள்நாட்டு விமான சேவைகளும், முனையம் 2ல் சவுதி தேசிய நிறுவனங்களின் சர்வதேச விமான சேவைகளும் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அச்சுறுத்தல் காரணமாக, குறைந்த அளவிலான விமானங்கள் மட்டுமே இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

பகிரங்க எச்சரிக்கை:

இந்நிலையில், விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதற்கு, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ரியாத் விமான நிலையம் எங்களின் ராணுவ இலக்கு. இது ஒருபோதும் பாதுகாப்பான இடமாக இருக்காது. பயணிகள், பணியாளர்கள் மற்றும் சர்வதேச விமான நிறுவனங்கள் இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என மிரட்டியுள்ளார்.

Source link