அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த சில மாதங்களாகவே உலக அளவில் பேசு பொருளாக மாறியுள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில், ஜனவரி மாதத்தில் வெனிசுலாவில் தாக்குதல் நடத்தப்பட்டு, அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ அமெரிக்க ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார். இதையடுத்து, அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதாவது அந்நாட்டு துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றார். இருப்பினும், இந்த நாட்டின் அனைத்து நிர்வாக கட்டுப்பாடுகளும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் பிடியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதனிடையே, வெனிசுலா தனது கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறிய ட்ரம்ப், தன்னை “ஆக்டிங் பிரசிடெண்ட் ஆப் வெனிசுலா” என அறிவித்துக் கொண்டார். இது உலக அளவில் பேசுபொருளாக மாறியது. இதையடுத்து, “வெனிசுலா மிகவும் அழகான மண், அங்கு இயற்கை வளங்கள் அதிக அளவில் உள்ளது. அதனால் வெனிசுலாவை அமெரிக்காவின் 51 வது மாகாணமாக இணைத்துக்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தி இருந்தார்.
இதனிடையே, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதால் போர் மூண்டது. கடந்த ஒரு மாதகாலமாக இந்த போர் நீடித்த நிலையில், தற்போது இரண்டு வாரங்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், “வெனிசுலா மக்கள் என்னிடம், நான் வெனிசுலா அதிபர் பதவிக்குப் போட்டியிட்டால், வெனிசுவேலாவின் வரலாற்றிலேயே வேறு எவரும் பெற்றிடாத அளவிற்கு அதிக வாக்குகளைப் பெற்று முன்னிலையில் இருப்பேன் என்று கூறுகிறார்கள். எனவே நான் அமெரிக்க அதிபர் பதவிக் காலம் முடித்த பிறகு, வெனிசுலாவுக்குச் செல்லலாம் என்று நினைக்கிறேன்” என்று நகைச்சுவையாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ” தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வெனிசுலா அதிபரைப் பற்றி நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனேயே இருக்கிறோம். வெனிசுலாவிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் தற்போது சுத்திகரிக்கப்பட்டு விற்பனைக்கும் சென்றுவிட்டது. அதனால் அதிக அளவு வருமானம் கிடைத்து வருகிறது. குறிப்பாக, வெனிசுலா அதிபரைச் சிறைபிடிக்க நடந்த தாக்குதலுக்குச் செலவிடப்பட்ட தொகையைவிடப் பல மடங்கு அதிகமான வருவாயை நாங்கள் இதன் மூலம் ஈட்டிவிட்டோம்” என்றும் அதிபர் டிரம்ப் கூறி இருக்கிறார்.
