இந்திய கபடி அணியில் இடம் கிடைத்தும் அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் வெளியில் கார்த்திக்கும் தமிழக வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு ஆதரவாகவும், இந்திய மகளிர் கபடி அணியின் பயிற்சியாளருக்கு எதிராகவும் கடுமையாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
சென்னையில் பெரிய குடியிருப்பு பகுதிகளில் ஒன்றாக இருக்கும் கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகா. அரசுப்பள்ளி மாணவியான இவர், கடந்த 2025-ம் ஆண்டு பக்ரைனில் நடைபெற்ற இளைஞர் ஆசிய விளையாட்டுப்போட்டியில் இந்திய அணிக்கான களமிறங்கி விளையாடினார். இந்த போட்டிகளில் இவர் ஆடிய விதம் பலரின் கவனத்தை ஈர்த்த நிலையில், இந்த தொடரில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியது.
அதிலும் குறிப்பாக ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல், இறுதிப்போட்டியில் ஈரானை 75-21 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி அசத்திய கார்த்திகா, மாநில அளவிலான அங்கீகாரத்தை பெற்ற நிலையில், தங்கப்பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய அவருக்கு, கண்ணகி நகர் மட்டும் இல்லாமல், தமிழகத்தின் பல அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களின் வரவேற்பையும் பெற்றிருந்தார்.
இந்நிலையில், இளைஞர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய கார்த்திகாவுக்கு, காமன்வெல்த் போட்டிக்கான இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. இந்திய அணியின் வீராங்கனைகள் அறிவிப்பு வெளியானபோது அதில் கார்த்திகாவின் பெயர் இடம் பெற்றிருந்த நிலையில், பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். ஆசிய இளைஞர் கபடி போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டனாக செயல்பட்டு அணி தங்கப்பதக்கம் வெல்ல முக்கியப் பங்காற்றி இருந்தார் கார்த்திகா.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் கபடிப்போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்தாலும், கார்த்திகாவுக்கு ஆடும் அணியில் விளையாடி வாய்ப்பு கிடைக்கவில்லை. இதில் அக்டோபர் 23-ந் தேதி நடைபெற்ற மலேசியாவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி 73-13 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து நேற்று (அக்டோபர் 24) நடைபெற்ற சிங்கப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 32-16 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இதில் மலேசியாவுக்கு எதிரான முதல் போட்டியில் 5 நிமிடங்கள் மட்டுமே விளையாடிய கார்த்திகாவுக்கு 2-வது போட்டியில் சிங்கப்பூருக்கு எதிராக முழு ஆட்டத்திலும் விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இளைஞர் ஆசியப் போட்டியில் இந்தியா தங்கம் வெல்ல முக்கிய காரணமாக இருந்த கார்த்திகாவுக்கு தற்போது வாய்ப்பு வழங்கப்படாதது தற்போது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
இது குறித்து உயிரே கபடி என்ற ஃபேஸ்புக் தளத்தில் ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில், நேற்றைய போட்டியில் கார்த்திகா அவர்கள் மாற்று வீராங்கனையாக களமிறங்கியதும் ரசிகர்களின் கைதட்டல் மற்றும் விசில் சத்தம் விண்ணை எட்டியது, ஆனால் அவருக்கோ ரைடு செல்லும் வாய்ப்பை அணி வழங்காமல் அவரை சும்மா பெயருக்காக உள்ளே வைத்துக் கொண்டு விளையாடுகிறார்கள். சும்மா பெயருக்காக உள்ள வைத்து விளையாட கார்த்திகா மூத்த வீராங்கனை கிடையாது, அவர் வளர்ந்து வரும் இளம் வீராங்கனை.
வருங்கால இந்தியா கபடி அணியின் நட்சத்திர வீராங்கனையாக வலம் வரக்கூடியவர் நமது கார்த்திகா,அது மட்டுமின்றி இந்தியாவின் தலைசிறந்த ரைட் ரைடராக திகழ்பவரும் கார்த்திகா தான், மற்ற வீராங்கனை மாறி மாறி ரைடு செல்கிறார்கள் ஆனால் நமது கார்த்திகாவை மட்டும் ரைடு செல்லவிடாமல் புறக்கணிக்கிறார்கள்… ஏன் இந்த பாரபட்சம் என தெரியவில்லை…ஆகையால் இனி வரும் போட்டிகளில் மற்ற வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பை போலவே கார்த்திகா அவர்களுக்கும் வழங்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
அகஸ்டின் ஜாஸ் என்பவர் வெளியிட்டுள்ள பதிவில், இவங்கதான் இந்திய பெண்கள் கபடி அணியின் பயிற்சியாளர் கவிதா செல்வராஜ்.நேற்று கார்த்திகாவுக்கு கடைசி 5 நிமிடம் மட்டுமே வாய்ப்பு கொடுத்தாங்க .இன்னைக்கு அது கூட கொடுக்கல கடைசி வரை பெஞ்சிலயே உட்கார வச்சிட்டாங்க ,எதோ இவங்க அணியை வழி நடத்துரதாலதான் பதக்கம் கிடைக்குதுன்னு மனசுல நெனச்சிட்டு இருக்காங்க போல ,இவங்களை விட கார்த்திகா 100 மடங்கு திற்மையான ஒரு வீராங்கனை அதுவும் 17 வயதில் இந்தியாவின் டாப் ரைடரா இருக்குது .
இந்தம்மா இந்திய அணிக்கு தேர்வாகி கடைசி வரை பெஞ்சிலதான் உட்கார்ந்து இருந்து இருக்கு..கார்த்திகாவை விளையாட விட்டால் இந்தம்மா இந்திய டீம்ல இருந்ததையே கபடி ரசிகர்கள் மறந்துருவாங்க என்கிற பொறாமை தான் காரணமா இருக்குமோன்னு தோனுது என்று பதிவிட்டுள்ளர்.
