அண்ணாமலைப் பல்கலைக்கழக வாயிலில் மாணவர்கள் கைது!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நுழைவு வாயிலில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நீட் தேர்வு குளறுபடிகளைக் கண்டித்து டெல்லி மற்றும் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஒன்றிய மோடி அரசைக் கண்டித்தும் போராட்டம் நடைபெற்றது. அதோடு நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், நீட் தேர்வு குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்குச் சங்கத்தின் நகரத் தலைவர் சிவநந்தினி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் சௌமியா, மாநிலக்குழு சபரி, மாவட்ட துணைத்தலைவர் மதிவாணன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கனிஷ்கர், மாவட்டக் குழு உறுப்பினர் திருமால், சுனில் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சாலையில் அமர்ந்து கோசங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாகக் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அண்ணாமலைப் பல்கலைக்கழக நுழைவாயில் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Source link