அதிகாலையில் வந்து நைட்டு டிரஸ்ஸோட போலீஸ் அழைச்சிட்டு வந்துட்டாங்க: நாம் தமிழர் கார்த்திகா குமுறல்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கார்த்திகா மற்றும் அவரது கணவரை அதிகாலை நேரத்தில் காவல்துறை கைது செய்து அழைத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   காவல்துறையின் வாகனத்தில் இருந்து இறங்கிய கார்த்திகா, ஊடகங்கள் மற்றும் பொதுமக்களிடம் தனது ஆதங்கத்தையும் குமுறலையும் வெளிப்படுத்தினார்.

கார்த்திகா பேசுகையில், “அதிகாலை 5 மணிக்கே காவல்துறையினர் எங்கள் வீட்டிற்கு வந்து, எந்தவித முன்னறிவிப்போ அல்லது கைதுக்கான முறையான காரணத்தையோ கூறாமல் என்னையும் என் கணவரையும் கைது செய்தனர். நான் இரவு அணிந்திருந்த ஆடையிலேயே (நைட் டிரஸ்சிலேயே) என்னை அப்படியே வலுக்கட்டாயமாக அழைத்து வந்துவிட்டனர்” என்று வேதனையுடன் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “சட்டவிரோதமாகக் கள்ளச்சந்தையில் சாராயம் விற்பவர்கள் மற்றும் சமூக விரோதிகள் சுதந்திரமாக உலா வருகிறார்கள். ஆனால், மக்களுக்காகத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரான என்னை எதற்காகக் கைது செய்கிறார்கள் என்ற காரணத்தைக் கூடக் கூற மறுக்கிறார்கள். ஆளுங்கட்சியினருக்கு ஒரு நீதியும், எதிர்க்கட்சிகளுக்கு ஒரு நீதியுமா? ஆளுங்கட்சிக்கு மட்டுமே பிரசாரம் செய்ய அனுமதி இருக்கிறதா?” எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், தங்கள் கட்சியினர் எந்தவித சட்டவிரோதச் செயல்களிலோ அல்லது ஆபாசப் பேச்சுகளிலோ ஈடுபடவில்லை என்றும், காவல்துறை மேலிடத்து அழுத்தத்தின் காரணமாகவே இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

காவல்துறையினரின் இந்த அணுகுமுறைக்குக் கண்டனம் தெரிவித்த கார்த்திகா மற்றும் அவருடன் இருந்த கட்சியினர், காவல்துறையின் வாகனத்திலும் மருத்துவமனை வளாகத்திலும் முழக்கங்களை எழுப்பியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.

Source link