சென்னை: ‘புதிய தொழில் பூங்கா அமைக்க, அதிக நிலம் தேவைப்படும் திட்டங்களை செயல்படுத்துவதில், அவசரப்பட வேண்டாம்’ என, தொழில்துறை அதிகாரிகளுக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த தி.மு.க., ஆட்சியில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், பரந்துார் விமான நிலையம் திட்டம்; கிருஷ்ணகிரியில் ஓசூர் விமான நிலைய திட்டம், அறிவுசார் வழித்தடம்; செங்கல்பட்டில் சர்வதேச நகரம் உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. பரந்துார் விமான நிலைய திட்டத்திற்கு, 5,300 ஏக்கர் தேவைப்படுகிறது. தனியாரிடம் உள்ள, 3,000 ஏக்கரில், 1,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு விட்டது.
பரந்துார் திட்டம் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில், ‘சிப்காட்’ எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம், தொழில் பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்தியபோது, சிலர் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்களில் ஈடுபட்டனர்.ஆட்சி மாற்றத்தால், பரந்துார் விமான நிலைய திட்டத்திற்கு, நிலம் கையகப்படுத்தும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில், 2,000 ஏக்கரில் சர்வதேச நகரம், ஓசூர் அறிவுசார் வழித்தடம் ஆகியவற்றுக்கு, இன்னும் நிலம் கையகப்படுத்தப்படவில்லை. இத்திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக, அதிகாரிகள் மற்றும் அரசு உயரதிகாரிகளுடன், அரசு தரப்பில் ஆலோசனை நடத்தப்பட்டது.
அப்போது, ‘புதிய தொழில் பூங்கா அமைப்பது உட்பட அதிக நிலம் தேவைப்படும் திட்டங்களை செயல்படுத்துவதில் அவசரப்பட வேண்டாம்; பொறுமையாக பார்த்துக் கொள்ளலாம்’ என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
