அதிக நேரம் செல்போன் பயன்பாடு..!! நிரந்தர பக்கவாதம் வரும் அபாயம்..!! டாக்டர்கள் சொன்ன காரணமும் தீர்வும்..!! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

ஸ்மார்ட்போன் மற்றும் கம்ப்யூட்டர் பயன்பாட்டின் போது நீண்ட நேரம் தலையைக் குனிந்தபடி வைத்திருப்பது, கழுத்து வலி மற்றும் நரம்பு மண்டல பாதிப்புகளை மிகத் தீவிரமாக அதிகரித்து வருவதாக மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன. மனித தலையின் இயல்பான எடை 5 கிலோகிராம் மட்டுமே என்றாலும், மொபைல் திரையைப் பார்க்கும்போது கழுத்தை முன்னோக்கி வளைப்பதால் கழுத்தெலும்பு மீதான உயிரியக்கவியல் அழுத்தம் சுமார் 27 கிலோகிராம் வரை உயர்கிறது. இதனால் இயல்பாக இருக்க வேண்டிய கழுத்து எலும்பின் வடிவம் கூன் நிலைக்கு (kyphotic) மாறுவதுடன், எலும்புகளுக்கு இடையேயான முதுகெலும்புத் தட்டுகள் தேய்மானத்திற்கு உள்ளாகின்றன.

அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலகம் மற்றும் சர்வதேச மருத்துவ ஆய்விதழ்கள் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, உடலின் தசை மற்றும் எலும்பு மண்டலம் சார்ந்த வலிகளில் 8.2% முதல் 90% வரையிலான பாதிப்புகள் ஸ்மார்ட்போன் பயன்பாட்டினால் ஏற்படுகின்றன. குறிப்பாக கனடாவில் உள்ள மாணவர்களில் 84 சதவீதம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக நேரம் குனிந்து ரீல்ஸ் மற்றும் சமூக ஊடகங்களைப் பார்ப்பதால் கழுத்து விறைப்பு ஏற்பட்டு, அந்த வலி தோள்பட்டை மற்றும் கைகள் வரை பரவுகிறது.

நரம்புகள் தொடர்ச்சியாக அழுத்தத்திற்கு உள்ளாகும்போது கை மற்றும் விரல்களில் மரத்துப்போதல், ஊசி குத்துவது போன்ற உணர்வு ஏற்படுவதுடன், கை மற்றும் விரல்களின் பிடிப்பு வலிமையும் குறைகிறது. இதனை அலட்சியப்படுத்தினால் தோள்பட்டை மற்றும் முழங்கைகளில் நிரந்தர பலவீனம் அல்லது பக்கவாதம் (Paralysis) ஏற்படும் அபாயம் உள்ளது.

இதேபோல, ஐடி ஊழியர்கள் போன்ற மேஜை பணிகளில் நீண்ட நேரம் தொடர்ந்து அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு, உடல் எடையின் அழுத்தம் இடுப்புப் பகுதி தண்டுவடத்தின் மீது நேரடியாக குவிகிறது. இதன் காரணமாக ‘லம்பார் டிஸ்க் ப்ரோலேப்ஸ்’ எனப்படும் தண்டுவட வட்டு விலகல் ஏற்பட்டு, முதுகிலிருந்து கால்களுக்கு வலி பரவுதல், கால் மரத்துப்போதல் மற்றும் தீவிர நிலையில் மலம், சிறுநீர் கழிக்கும் கட்டுப்பாட்டை இழப்பது போன்ற கடுமையான பாதிப்புகள் உருவாகின்றன.

இந்த பாதிப்புகளை தடுக்க ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் ஒருமுறை எழுந்து உடலை நீட்டிக்கும் ஸ்ட்ரெட்ச்சிங் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். முன், பின், இடம், வலம் மற்றும் பக்கவாட்டில் சாய்த்தல் ஆகிய 6 அடிப்படை கழுத்து அசைவுகளைத் தவறாமல் செய்ய வேண்டும். கம்ப்யூட்டர் திரை கண்களுக்கு நேராக இருக்கும் வகையில் பணிச்சூழலியல் (Ergonomics) அமைப்பை உறுதி செய்ய வேண்டும்.

தரையில் உள்ள பொருட்களை எடுக்கும்போது இடுப்பை வளைக்காமல் முழங்கால்களை மடக்கி எடுக்க வேண்டும். குறிப்பாக, பலர் வழக்கமாக கொண்டுள்ள கழுத்தில் ‘சொடுக்கு’ எடுக்கும் பழக்கத்தையும், சலூன்களில் கழுத்தை வேகமாகத் திருப்புவதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்; ஏனெனில் இது தலை மற்றும் கழுத்து மூட்டுகளில் உள்ள நரம்புகளைத் தீவிரமாக பாதித்து உயிருக்கு உலை வைக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Source link