அதிக போதைப்பொருள் பயன்பாடே சவுதி இளவரசர் உயிரிழக்க காரணம்: பிரிட்டன் விசாரணையில் அம்பலம்

லண்டன்: ‘அதிகப்படியான மது மற்றும் போதைப்பொருட்கள் உட்கொண்டதால் ஏற்பட்ட மாரடைப்பே சவுதி இளவரசர் அப்துல்லா பின் பஹத், 29, உயிரிழப்புக்கு காரணம்’ என, பிரிட்டன் நீதிமன்ற விசாரணையில் உறுதியாகி உள்ளது.

மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் இளவரசராக இருந்த அப்துல்லா பின் பஹத், கடந்த ஆண்டு நவம்பரில் ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டன் சென்றார். அங்கு, ‘ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தபோது, தன் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், அவரது அறைக்கு வேறு யாரும் செல்லவில்லை என்பது உறுதியானது.

இந்த வழக்கை, லண்டன் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், இளவரசரின் உடற்கூராய்வு பரிசோதனை முடிவுகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. அதன் விபரம்:

டாக்டர்கள் குழுவின் நச்சுவியல் அறிக்கையின்படி, இளவரசரின் ரத்தத்தின் அனுமதிக்கப்பட்ட அளவை விட மூன்று மடங்கு அதிகளவில், ‘ஆல்கஹால்’ இருந்தது கண்டறியப்பட்டது. விருந்துகளில் பயன்படுத்தப்படும் வீரியமிக்க போதைப் பொருள், மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் சக்திவாய்ந்த மாத்திரைகளின் கலவையும் அவர் உடலில் இருந்தது. இந்த ஆபத்தான கலவை காரணமாக ஏற்பட்ட மாரடைப்பால் இ ளவரசர் உயிரிழந்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link