தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இடைத்தேர்தல் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இடையேயான போட்டி தற்போதே சூடுபிடித்துள்ளது. மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தவெக தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிவிப்பின்படி, மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்யபாமாவும் போட்டியிடுகின்றனர். இருவரும் ஏற்கனவே அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தவர்கள். அதன்பிறகு அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த நிலையில், தற்போது மீண்டும் அதே தொகுதிகளில் களம் காண்கின்றனர்.
இருவரும் தவெக தலைமையில் உருவாகியுள்ள ‘மதசார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ சார்பில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில், விஜய் இன்று வேட்பாளர்களை அறிவித்துள்ளார். வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அதற்கு முன்பாகவே இந்த முக்கிய அறிவிப்பை தவெக வெளியிட்டுள்ளது.
மதுராந்தகம் (தனி) தொகுதியில் திமுக சார்பில் எஸ். பரந்தாமனும், தாராபுரம் (தனி) தொகுதியில் எஸ். சுகன்யாவும் போட்டியிடுகின்றனர். அதிமுக தரப்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இரு தொகுதிகளிலும் அதிமுக விரைவில் வேட்பாளர்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளும் கடந்த தேர்தலில் அதிமுக வசம் இருந்ததால், அவற்றை மீண்டும் கைப்பற்றுவது அக்கட்சிக்கு முக்கியமானதாக உள்ளது. அதே நேரத்தில், திமுகவும் இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்று தனது அரசியல் பலத்தை நிரூபிக்க தீவிரம் காட்டுகிறது.
இதனால் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் மும்முனைப் போட்டிக்கான களம் தயாராகி வருகிறது. வேட்பாளர் அறிவிப்புகள் முழுமையடைந்ததும் தேர்தல் பிரசாரமும் மேலும் தீவிரமடையும் சூழல் உருவாகியுள்ளது.
Also Read: HPV தடுப்பூசி திட்டத்திற்கு எதிரான வழக்கு.. உச்சநீதிமன்றம் அதிரடி முடிவு! மனுவை விசாரிக்க மறுப்பு..
