”அது நாங்கள் இல்லை… நரேந்திர மோடி தான்”; அபிஜித் தீப்கே காட்டம்

ஒன்றிய பாஜக அரசின் தவறுகள் மற்றும் நிர்வாக சீர்கேடுகள் உள்ளிட்டவற்றை எதிர்த்துப் பேசும் கட்சிகள் மற்றும் சமூக நல அமைப்புகளை,  வெளிநாட்டுச் சக்திகள் இயக்குவதாக பாஜகவினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சட்டத்திற்குப் புறம்பாக, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக எழுந்த புகாரையடுத்து, ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் மற்றும் சிஜேபி உள்ள அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன.  

இந்நிலையில், இந்த போராட்டம் ஆளும் பாஜக அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, பாஜகவினர் எதிர்க்கட்சிகள் மற்றும் சிஜேபி உள்ளிட்ட அமைப்புகள் மீது பல்வேறு விதமான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், சிஜேபி உள்ளிட்ட அமைப்புகள் வெளிநாட்டுச் சக்திகளின் கட்டுப்பாட்டில் இயங்குவதாகவும், அந்த சக்திகளின் தூண்டுதலாலேயே இந்த அமைப்புகள் போராட்டம் நடத்துவதாகவும் பாஜகவினர் தொடர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.  

இதற்கு,  சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே, பாஜகவினர் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். அமெரிக்காவுடனான இந்திய அரசின் வர்த்தக ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டிய அபிஜித் தீப்கே, பாஜகவினர் வெளிநாட்டுச் சக்திகளுடன் தங்களை இணைத்துப் பேசுவதற்குக் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார். இது சம்பந்தமாக தனது சமூக வலைத்தளப்பக்கத்தில், ”அமெரிக்கப் பொருட்களுக்கான இறக்குமதி வரிகளைப் பூஜ்ஜியமாகக் குறைக்க ஒப்புக்கொண்டது நரேந்திர மோடி தான். 500 பில்லியின் டாலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களை வாங்குவதாக உறுதியளித்ததும் நரேந்திர மோடி தான்.

டிரம்ப் கேட்டுக்கொண்டதற்காக, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த ஒப்புக்கொண்டதும் நரேந்திர மோடி தான். ஆனால், எதிர்க்கட்சிகளும், சிஜேபியும் வெளிநாட்டுச் சக்திகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகச் சிலர் கூறுகின்றனர்” என்று விமர்சித்துள்ளார்.  

அமெரிக்காவுடனான, இந்த ஒப்பந்தத்தால் உள்நாட்டு வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கும், குறிப்பாக விவசாயிகள் மோசமான சூழலுக்குத் தள்ளப்படுவார்கள் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து, இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதே நேரத்தில், விவசாய அமைப்புகளும் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து போராட்டம் நடத்தின. ஆனாலும், நரேந்திர மோடி விவசாயிகளின் போராட்டத்திற்குச் செவிமடுக்கவில்லை. இந்நிலையில், நரேந்திர மோடியும் , ஒன்றிய பாஜக அரசும் வெளிநாட்டுச் சக்திகளின் அழுத்தத்திற்குப் பணிந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அபிஜித் தீப்கேவின் இந்த பதிவு வரலானதைத் தொடர்ந்து, ”வெளிநாட்டுச் சக்திகளின் கட்டுப்பாட்டில் இருப்பது பாஜகவும், நரேந்திர மோடியும் தான், நாங்கள் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.