“அதே பழைய ரீலை சுற்றும் மோடி அரசு”

20 லட்சம் மக்கள் தொகை இல்லாமல் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்க முடியாது எனக் கூறி கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான தமிழ்நாடு அரசின் திட்ட அறிக்கையை மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் திருப்பி அனுப்பியது. அதில், கோவையில் 15.84 லட்சம், மதுரையில் 15 லட்சம் மட்டுமே மக்கள் தொகை இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதனையடுத்து கடந்த மே மாதம் தமிழக அரசு, கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கக் கோரி பரிந்துரையை அனுப்பியிருந்தது. 

இந்நிலையில், ‘மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் அளவுக்கு மக்கள் தொகை இல்லை. எனவே இந்த திட்டத்திற்கு அனுமதி அளிக்க முடியாது’ என மத்திய அரசின் வீட்டு வசதித் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. அதோடு, இந்த இரு நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் அமைவதால் பயண நேரம் குறைய வாய்ப்பில்லை. அப்பகுதிகளில் கூடுதல் பேருந்துகளை இயக்குமாறு தமிழக அரசிற்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதோடு, இந்த இரு நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் அமைவதால் பயண நேரம் குறைய வாய்ப்பில்லை. அப்பகுதிகளில் கூடுதல் பேருந்துகளை இயக்குமாறு தமிழக அரசிற்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

இந்நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற மக்களவை கொறடாவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான மாணிக்கம் தாகூர் எம்.பி., “கோவை & மதுரைக்கு மெட்ரோ ரயில் மறுப்பா?. அதே பழைய ரீலை சுற்றும் மோடி அரசு!” எனக்  குறிப்பிட்டு எக்ஸ் சமுக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மோடி அரசின் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்களை நிராகரிக்க அதே பழைய ரீலைத் தான் சுற்றுகிறார்கள்… எந்த மாற்றமும் இல்லை. 

இதுதான் பழைய ரீல்:

1. பழைய கணக்கெடுப்பு சாக்கு: 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல், 14 ஆண்டுகள் பழமையான 2011 கணக்கீட்டைப் (கோவை 15.84 லட்சம், மதுரை 15 லட்சம்) பிடித்துக்கொண்டு 20 லட்சம் மக்கள் தொகை இல்லை எனத் திட்டம் நிராகரிக்கப்படுகிறது. 2. இரட்டை நிலைப்பாடு: ஆக்ரா, போபால், பாட்னா, இந்தூர் போன்ற நகரங்களுக்கு மெட்ரோ வழங்கிவிட்டு, தென்னகத்தின் முக்கியத் தொழில் மற்றும் சுற்றுலா நகரங்களான கோவை & மதுரைக்கு மட்டும் விரைவுப் பேருந்துப் போக்குவரத்து அமைப்பா? (BRTS). 3. வளர்ச்சிப் புறக்கணிப்பு: மிதக்கும் மக்கள் தொகை (Floating Population) மற்றும் நகர்ப்புற அதிவேக வளர்ச்சியை முற்றிலுமாக புறக்கணிப்பது எந்த விதத்தில் நியாயம்?. பழைய தரவுகளைக் காட்டி தமிழக நகரங்களின் வளர்ச்சியைத் தடுப்பதை நிறுத்துங்கள்!. கோவை மற்றும் மதுரைக்கு உடனடியாக மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிடுக” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Source link