சென்னை: அனுமதியின்றி மத பிரசாரம் செய்ததாக, அமெரிக்காவை சேர்ந்தவரின், ‘வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர்’ என்ற பதிவை ரத்து செய்த, மத்திய அரசின் உத்தரவை உறுதி செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அமெரிக்காவில் உள்ள ‘லேமென்ஸ் இவாஞ்சலிக்கல் பெலோஷிப் இண்டர்நேஷ்னல்’ நிறுவனத்தில் பணியாற்றி, இந்தியாவில் மத பிரசாரம் செய்ததாகக் கூறி, ஜான் டேனியல் என்பவரின், வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர் என்ற பதிவை ரத்து செய்து, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதை ரத்து செய்ய கோரி, ஜான் டேனியல், சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தார்.
மனுவில், ‘என் உறவினர்கள் சென்னையில் வசிக்கின்றனர். அவர்களை காணவே, இந்தியா வந்தேன். எந்தவிதமான மத பிரசாரத்திலும் ஈடுபடவில்லை’ என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு, நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில், கடந்த 2018 – -19ம் ஆண்டுகளில், ஆந்திராவுக்கு வந்த ஜான் டேனியல், மத பிரசாரங்களில் ஈடுபட்டு உள்ளதாக கூறி, அதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
குடியுரிமை சட்டத்தின்படி, மத பிரசாரத்துக்கு மத்திய அரசிடம் முன் அனுமதி பெற வேண்டியது கட்டாயம். ஆனால், மத்திய அரசின் அனுமதியின்றி, ஜான் டேனியல் மத பிரசாரத்தில் ஈடுபட்டது, உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே, வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர் என்ற பதிவை, மத்திய அரசு ரத்து செய்தது சரியானதே. தன் தாயை சந்திக்க, வழக்கமான விசாவுக்கு விண்ணப்பித்து, ஜான் டேனியல் இந்தியாவுக்கு வரலாம்.
