“அனுமதி மறுக்கப்பட்டது…” – அதிர்ச்சி பதிவு வெளியிட்ட அனுபமா பரமேஸ்வரன்!

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தமிழில் கடைசியாக பைசன் படத்தில் நடித்திருந்தார். ஆனால் அதற்கு முன்பு அவர் நடித்து வெளியாகாமல் இருந்த ‘லாக்டவுன்’ படம் பைசன் படத்திற்கு பின்பு வெளியானது. 

இந்த நிலையில் இவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவு ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டிருப்பதாவது, “சில சமயங்களில், நிம்மதியை அடைய பயனில்லாத பாதைகளைக் கைவிட வேண்டியிருக்கும். அந்த நிம்மதி இப்போது என்னைத் தேடி வந்தது. இன்றிலிருந்து, என் வாழ்க்கையை நானே தேர்ந்தெடுக்கிறேன். இனி யாருடைய அனுமதியும் தேவையில்லை. இனி பயமும் இல்லை. நான் மீண்டும் என்னையே கண்டு பிடிக்கிறேன். ஒரு காலத்தில் என்னுடையது என்பதை மறந்திருந்த அந்த வாழ்க்கையை மீண்டும் நேசிக்கத் தொடங்குகிறேன். நீண்ட நாட்களாக நான் சொல்ல நினைத்த ஒரு விஷயம் இருக்கிறது. அதைச் சொல்ல எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. உங்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன். 

எனக்குத் துணையாக நின்றதற்கும், என் மீது நம்பிக்கை வைத்ததற்கும், என் வாழ்க்கையை அன்பால் நிரப்பியதற்கும் நன்றி. இதை நான் முன்பே போதுமான அளவு சொல்லியிருக்காவிட்டாலும், என் மனதில் அந்த உணர்வு எப்போதும் இருந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். எனக்கு மிகவும் தேவைப்பட்ட தருணங்களில் உங்கள் ஒவ்வொரு செய்தியும், ஒவ்வொரு பிரார்த்தனையும், ஒவ்வொரு அன்பான செயலும் என்னை வந்தடைந்தன. என்னை மீண்டும் என்னிடமே அழைத்து வந்த பிரபஞ்சத்திற்கு நன்றி. மனம் ஆறுவதைக் கொண்டாடுவோம். சுதந்திரத்தைக் கொண்டாடுவோம். இறுதியாக, முழுமையாக, எதற்காகவும் தயங்காமல் எனக்கே உரியதாக அமைந்த வாழ்க்கையைக் கொண்டாடுவோம்” எனப் பதிவிட்டுள்ளார். 

இந்த பதிவு சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியது. அவர் ஒரு இளம் நடிகரை காதலித்து வந்ததாகவும் அவருடன் பிரிவு ஏற்பட்டவுடன் சுதந்திரத்தை உணர்வதாகவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இருப்பினும் அனுபமா வெளிப்படையாக எந்த விஷயத்தில் இருந்து பாதிக்கப்பட்டு தற்போது மீண்டுள்ளார் என்பதை முழுமையாகத் தெரிவிக்கவில்லை. 



Source link