அனைத்துக் கட்சிக் கூட்டம்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை (20.07.2026) காலை தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவை என நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மொத்தம் 19 அமர்வுகளாக இந்தக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த டெல்லியில் இன்று (19.07.2026) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் அரசு தரப்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். 

அதே சமயம், பல்வேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை குழுத் தலைவர்களும் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். முன்னதாக, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தனிக் குழுவாக செயல்படும் எம்.பி.க்களுக்கும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவிலிருந்து விலகி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்த ஆறு மக்களவை உறுப்பினர்களுக்கும் அங்கீகாரம் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, திமுக, ஜே.எம்.எம்., ஆம் ஆத்மி கட்சி, தேசிய மாநாட்டு கட்சி, இடதுசாரிக் கட்சிகள், சிவசேனா யுபிடி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

அதன்படி தங்களது எதிர்ப்பை பதிவு செய்த அவர்கள், பின்னர் மீண்டும் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனைகளில் பங்கேற்றனர். அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா எடுத்த இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கட்சியை விட்டு விலகிய உறுப்பினர்களை தனிக் குழுவாக அங்கீகரித்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கும் அழைத்தது ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர்கள் தெரிவித்தனர். மேலும், நாளை தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. 

Source link