அன்னாபிஷேகம் 2026 : ஐப்பசி மாத பெளர்ணமி எப்போது? இந்த நாளில் பக்தர்கள் என்ன செய்ய வேண்டும்?

ஒவ்வொரு மாத பெளர்ணமியும் சிவ வழிபாட்டிற்கு ஏற்றது என்றாலும் ஐப்பசி மாதத்தில் வரும் பெளர்ணமியில் சிவனுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியதாகும்.

ஐப்பசி அன்னாபிஷேகம் :

ஐப்பசி மாதம் ஆன்மீக சிறப்புமிக்க மாதமாகும். இந்த மாதத்தில் எத்தனையோ உற்சவங்கள் நடைபெற்றாலும் ஐப்பசி மாத பெளர்ணமி நாளில் சிவன் கோவில்களில் நடக்கும் அன்னாபிஷேகம் மிகவும் சிறப்புமிக்கதாகும். பொதுவாக ஒவ்வொரு மாத பெளர்ணமி அன்றும் ஒவ்வொரு பொருளைக் கொண்டு அபிஷேகம் செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது. அப்படி ஐப்பசி மாதத்தில் வரும் பெளர்ணமியில், அபிஷேக பிரியரான சிவபெருமானின் லிங்க திருமேனிக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது. “சோறு கண்ட இடம் சொர்க்கம்” என்ற சொல் வழக்கு உண்டு. இதன் பொருள், ஐப்பசி அன்னாபிஷேகம் அன்று சிவனுக்கு சாத்தப்படும் ஒவ்வொரு அன்னத்தின் பருக்கையிலும் ஒரு சிவ லிங்கம் இருப்பதாக ஐதீகம். அதனால் அன்னாபிஷேகத்தை தரிசனம் செய்பவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

ஐப்பசி பெளர்ணமி அன்னாபிஷேகம் 2026 :

ஐப்பசி அன்னாபிஷேகம் 2026 தேதி அக்டோபர் 25 ஞாயிறு பெளர்ணமி திதி துவக்கம் அக்டோபர் 25 காலை 11.31 பெளர்ணமி திதி நிறைவு அக்டோபர் 26 காலை 10.16

கோவில்களில் அன்னாபிஷேகம் :

அன்னாபிஷேகம் நடக்கும் நேரம் ஒவ்வொரு கோவிலிலும் மாறுபடலாம். சில கோவில்களில் காலை நேரத்திலும், சில கோவில்களில் மாலை நேரத்திலும் நடத்தப்படலாம். ஐப்பசி மாத பெளர்ணமி அன்று முதலில் சிவபெருமானுக்கு வழக்கமாக செய்யப்படும் பால், தயிர், தேன், சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்வார்கள். அதற்கு பிறகு புதிதாக வடித்து ஆறவைத்த சாதத்தை கொண்டு லிங்க திருமேனியை முழுவதுமாக மூடுவார்கள். சில ஆலயங்களில் அதற்கு மேல் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை கொண்டும் அலங்காரம் செய்வார்கள். பிறகு மகா தீபாராதனை நடத்தப்படும். அதற்கு பிறகு லிங்க திருமேனியில் சாத்தப்பட்ட அன்னப்பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படும்.

வீட்டில் அன்னாபிஷேகம் செய்யலாமா?

கோவிலுக்கு சென்று வழிபட முடியாதவர்கள், வீட்டிலேயே விளக்கேற்றி சிவபெருமானுக்கு வடித்த சாதத்துடன் சிறிது நெய் கலந்து வைத்தும், தயிர் சாதம் படைத்தும் வழிபடலாம். வீட்டில் லிங்கம் வைத்திருப்பவர்கள் சுத்தமான தண்ணீரால் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து விட்டு, பிறகு பச்சிரியில் குலைவாக வடித்து ஆற வைத்த சாதத்தால் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபடலாம்.

இந்த நாளில் பக்தர்கள் என்ன செய்ய வேண்டும்?

– அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று அன்னாபிஷேகத்தை தரிசனம் செய்யலாம். இதனால் கோடி சிவலிங்கங்களை ஒரே நேரத்தில் தரிசித்த பலன் கிடைக்கும்.

– அன்னாபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம்.

– பசியால் வாடும் யாராவது இரண்டு பேருக்கு அன்னதானம் வழங்கலாம்.

– உணவை வீணாக்காமல் சிவனுக்கு அபிஷேகம் செய்த அன்ன பிரசாதத்தை பக்தியுடன் உண்ண வேண்டும்.

Source link