தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையால் அமைந்தகரையில் நேற்று முன்தினம் (26.10.2026) கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவரை வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையரகத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அன்பில் மகேஷ் அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அன்பில் மகேஷுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனைக்குப் பின்னர் அன்பில் மகேஷ் மீண்டும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். இதனையடுத்து அன்று இரவே, சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சத்தியமூர்த்தி முன்பாக அன்பில் மகேஷ் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை வரும் நவம்பர் மாதம் 6ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி சத்யமூர்த்தி உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவைத் தொடர்ந்து, நள்ளிரவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் சென்னை புழல் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அன்பில் மகேஷை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதாவது அவரிடம் விசாரணை நடத்துவதற்காகக் காவலில் எடுக்க அனுமதி கோரி மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
