அன்பில் மகேஷ் கைதால் வாக்குவாதம்; சேகர்பாபுவுக்கு அதிர்ச்சி கொடுத்த போலீஸ்!

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி அளவில் பண மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையால் அமைந்தகரையில் கடந்த 26ஆம் தேதி மாலை கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்ப்பட்ட அவரை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வெளியே திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, திமுக எம்.பி கலாநிதி வீராசாமி உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் அங்கு குவிந்து தங்களை உள்ளே அனுமதிக்குமாறு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, எம்.பி கலாநிதி வீராசாமி ஆகியோர் மீது வேப்பேரி போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வேப்பேரி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.