தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையால் அமைந்தகரையில் நேற்று (26.10.2026) மாலை கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவரை வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையரகத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அன்பில் மகேஷ் அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அன்பில் மகேஷுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனைக்குப் பின்னர் அன்பில் மகேஷ் மீண்டும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். இந்நிலையில் அன்பில் மகேஷ், சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சத்தியமூர்த்தி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, காவல்துறை மற்றும் அன்பில் மகேஷ் தரப்பு வழக்கறிஞர்களிடையே காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதாவது அன்பில் மகேஷ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், காவல்துறையினர் வழக்கறிஞர் அலுவலகத்திற்குள் புகுந்து இந்த கைதை நடத்தியுள்ளனர் என்றும், இது முறையான சட்ட நடைமுறை அல்ல என்றும் சுட்டிக்காட்டினார். மேலும், காவல்துறையின் இந்த சட்டவிரோத கைது நடவடிக்கையை முன்னிறுத்தி, அன்பில் மகேஷை நீதிமன்றக் காவலில் (ரிமாண்ட்) வைப்பதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், அன்பில் மகேஷை கைது செய்வதற்கு முன்பாக காவல்துறையினர் ஒரு மணி நேரம் பொறுமையுடன் காத்திருந்த பின்னரே சட்டப்படியான கைது நடவடிக்கையை மேற்கொண்டதாக வாதிட்டார். இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி சத்தியமூர்த்தி, வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு விரிவான விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
