அன்பில் மகேஸ் கைது: "நிர்வாகச் சீர்கேடு, பழிவாங்கல், அடக்குமுறை" – திமுக தலைவர்கள் சொல்வது என்ன?

கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில், தனியார்ப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி பெறப்பட்டு மோசடி நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருந்தது.

அந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அன்பில் மகேஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். நேற்று காலை அவருடைய மனுத் தள்ளுபடி செய்ய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் சென்னை அமைந்தகரையில் வைத்து முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை மாலைக் கைதுசெய்தனர். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து அன்பில் மகேஸிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின், “அரசியல் காழ்ப்புணர்வோடு முன்னாள் அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களைக் கைது செய்துள்ள த.வெ.க. அரசுக்குக் கடும் கண்டனம்! தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வந்த திரு. அன்பில் மகேஸ் அவர்களைக் கைது செய்திருப்பதன் மூலம், சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கின் அவலட்சணத்தையும், அழுகிக் கொண்டிருக்கும் நிர்வாகச் சீர்கேட்டையும் சில நாட்களுக்கு மறைத்து, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிடலாம் என்று ஆளும் அரசு நினைக்கிறது.

அன்பில் மகேஸ் அவர்கள் தன் மீதான குற்றச்சாட்டுகளைச் சட்டப்படி எதிர்கொள்வார். அதேசமயம், இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் மக்களின் கோபத்தைத் திசைதிருப்பித் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கும் த.வெ.க. அரசின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

எம்.பி கனிமொழி, “முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்களை அரசியல் பழிவாங்கும் நோக்கில் கைது செய்திருக்கிறது தவெக அரசு. தமிழ்நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள சட்டம் ஒழுங்குப் பிரச்னைகளைத் திசைத்திருப்ப இத்தகைய அடுக்கமுறைகளில் தவெக அரசு இறங்கியிருக்கிறது. இவற்றை சட்ட ரீதியாக தி.மு.கழகம் எதிர்கொள்ளும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

கனிமொழி
கனிமொழி

எம்.பி.தயாநிதி மாறன், “முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்களை அரசியல் காழ்ப்புணர்வோடு கைது செய்துள்ள த.வெ.க. அரசுக்குக் கடும் கண்டனம்! தொடர்ந்து சீர்கெட்டு வரும் சட்டம் ஒழுங்கையும், தொடர் கொலைகளையும், நிர்வாகச் சீர்கேட்டையும் மூடி மறைக்க, மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப த.வெ.க. அரசு பெரிதும் பாடுபட்டு வருகிறது.

எல்லா மக்களையும் சில நேரங்களில் ஏமாற்ற முடியும்; மக்களில் சிலரை எல்லா நேரங்களிலும் ஏமாற்ற முடியும். ஆனால் ஒட்டுமொத்த மக்களையும் எல்லா நேரங்களிலும் ஏமாற்ற முடியாது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, “முன்னாள் அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த அரசின் மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் கோபத்தை மடைமாற்றுவதற்காகவே இந்தக் கைது நடைபெற்றிருப்பதாக கருதவேண்டியுள்ளது.

அடக்குமுறையினால் திராவிட முன்னேற்றக் கழகத்தை முடக்கவும் முடியாது. தடைகளை உடைத்து முன்னேறிய வரலாறுதான் திமுகவின் வரலாறு!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link