சென்னை: பதவியில் இருக்கும் முதல்வர் ஒருவர் நாயகனாக நடித்த படம் 50 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது.
முதலில் இந்த ஆண்டு ஜனவரியில் வெளியாகும் எனத் திட்டமிடப்பட்டிருந்த ‘ஜன நாயகன்’ திரைப்படம் சென்சார் போர்டு சான்றிதழ் வழங்க மறுத்ததால் சர்ச்சையில் சிக்கியது. அதனைத் தொடர்ந்து, இப்படம் சட்டப் போராட்டங்களில் சிக்கி, மேலும் தாமதங்களுக்கு வழிவகுத்தது.
தமிழகத்தில் 1000 திரைகளிலும், இந்தியா முழுக்க 3,000 திரைகளிலும், உலகம் முழுக்க ஐந்தாயிரத்துக்கும் அதிகமான திரைகளிலும் இன்று ஜனநாயகன் படம் வெளியாகி இருக்கிறது. 1977ல் எம்.ஜி.ஆர் முதல்வராக பதவியேற்ற இரண்டு மாதங்களுக்குப் பிறகு வெளியான ‘மீனவ நண்பன்’ படத்தை போலவே, விஜய் பதவியேற்று இரண்டு மாதங்களுக்குள் இப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது.
எம்.ஜி.ஆர் இயக்கி, நடித்த மற்றொரு படமான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’, அவர் பதவியேற்ற ஆறு மாதங்களுக்குப் பிறகு வெளியானது. எம்.ஜி.ஆரின் பதவியேற்புக்கு முன்பே இவ்விரு படங்களின் பணிகளும் தொடங்கப்பட்டன, ஆனால் பார்லிமென்ட் தேர்தல்கள் மற்றும் சட்டசபை தேர்தல்கள் உள்ளிட்ட கொந்தளிப்பான அரசியல் சூழல் காரணமாக படப்பிடிப்பும் வெளியீடும் தாமதமானது.
இப்போது விஜய் பதவியேற்றுள்ள நிலையில், அவரது திரைக் கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மிகுந்த ஆதரவளிப்பார்கள் என்று எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. பதவியில் இருக்கும் ஒரு முதல்வர் நாயகனாக நடித்த திரைப்படத்தை தமிழக மக்கள் கடைசியாகப் பார்த்து 50 ஆண்டுகள் ஆன நிலையில், மீண்டும் தற்போது அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஒரு நடிகராக விஜய் வெளிப்படுத்திய வார்த்தைகளும் எண்ணங்களும் பொதுமக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அதுவே தேர்தலில் அவருக்கு கிடைத்த மாபெரும் வெற்றிக்கு காரணம். இந்தப் படமும் அவ்வாறே தாக்கத்தை ஏற்படுத்தும். நல்ல கூட்டம் வரும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
