வெலிங்டன்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான 3-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் அபிஷேக் சர்மாவின் அதிரடி சதத்தால் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை தன்வசப்படுத்தியது.
வெலிங்டனில் உள்ள ஹென்றி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 198 ரன்கள் குவித்தது. தனது 8-வது அரை சதத்தை அடித்த டேரில் மிட்செல் 52 பந்துகளில்் 89 ரன்கள் விளாசினார். ஃபின் ஆலன் 40 ரன்களும், பெவன் ஜேக்கப்ஸ் 39 ரன்களும் விளாசினர். இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
199 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி ஜோடி அதிரடி தொடக்கம் கொடுத்தது. ஜேக்கப் டஃபி வீசிய முதல் ஓவரில் 26 ரன்கள் விளாசப்பட்டன. ஆடம் மில்னே வீசிய அடுத்த ஓவரில் 17 ரன்களும், மைக்கேல் பிரேஸ்வெல் வீசிய 3-வது ஓவரில் 21 ரன்களும், கைல் ஜேமிசன் வீசிய 4-வது ஓவரில் 20 ரன்களும் விளாசப்பட்டன.
இந்த ஜோடியின் அதிரடியால் 5 ஓவர்களிலேயே இந்திய அணி 100 ரன்களையும், தொடர்ந்து பவர்பிளேவில் 118 ரன்களையும் குவித்து சாதனை படைத்தது. இதற்கு முன்னர் கடந்த 2021-ல் செர்பியாவுக்கு எதிராக ருமேனியா அணி பவர்பிளேவில் 116 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது. இதை தற்போது இந்திய அணி முறியடித்துள்ளது. மேலும் 100 ரன்களை விரைவாக எட்டிய அணி என்ற சாதனையையும் இந்தியா படைத்தது. இதற்கு முன்னர் செர்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ருமேனியா 5.2 ஓவர்களில்100 ரன்கள் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது.
சூர்யவன்ஷி 19 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்த நிலையில் மேட் பிஷர் பந்தில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு சூர்யவன்ஷி, அபிஷேக் ஜோடி 7.1 ஓவர்களில் 133 ரன்களை வேட்டையாடியது.
நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய அபிஷேக் சர்மா 35 பந்துகளில், 10 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். இது அவரது 3-வது சதமாக அமைந்தது. அவர் 38 பந்துகளில், 11 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 113 ரன்கள் விளாசிய நிலையில் கைல் ஜேமிசன் பந்தில் ஆட்டமிழந்தார்.
இதன் பின்னர் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 5, சஞ்சு சாம்சன் 18 ரன்களில் வெளியேறினர். திலக் வர்மா 1, நமன் திர் 4 ரன்கள் சேர்க்க இந்திய அணி 13.2 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து 199 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக அபிஷேக் சர்மா தேர்வானார். 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரை 3-0 என தன்வசப்படுத்தியது. கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற முதல் 2 போட்டியிலும் இந்திய அணி தலா 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. 4-வது போட்டி வரும் 30-ம் தேதி ஆக்லாந்தில் நடைபெறுகிறது.
‘ஹாட்ரிக்’ வெற்றி
நியூஸிலாந்துக்கு எதிராக நேற்று வெலிங்டனில் நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. நியூஸிலாந்து மண்ணில் இந்திய அணி தொடர்ச்சியாக 3-வது முறையாக டி 20 தொடரை வென்றுள்ளது. கடந்த 2020-ல் டி 20 தொடரை 5-0 எனவும், 2022-ல் 1-0 எனவும் இந்திய அணி வென்றிருந்தது.
