கடந்த 2018ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சியின் சார்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்த வகையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக பா.ஜ.க.வைச் சேர்ந்த விஜய் மிஸ்ரா, உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு சுல்தான்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என கடந்த 2023ஆம் ஆண்டு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி கடந்த 2023ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி, ஜாமீனும் பெற்றார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை பல மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதற்கிடையில், இந்த வழக்கின் தீர்ப்பை அக்டோபர் 13ஆம் தேதி அறிவிப்பதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. ஆனால், அது அக்டோபர் 26ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில், இன்று (26-10-26) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ராகுல் காந்தி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.எஸ். சீமா மற்றும் வழக்கறிஞர்கள் காஷி சுக்லா, தரன்னும் சீமா, பிரசன்னா எஸ். மற்றும் ஆகாஷ் சிங் ஆகியோர் ஆஜராகினர். அனைத்து வாதங்களைக் கேட்ட நீதிமன்றம், ‘ராகுல் காந்தியின் கருத்துகள் அவதூறானவை அல்ல, அவர் குற்றமற்றவர்’ எனக் குறிப்பிட்டு இந்த வழக்கில் இருந்து ராகுல் காந்தி விடுவிக்கப்பட்டார். மேலும் ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கை தள்ளுபடி செய்யப்பட்டது.
