கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான்
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான், தனது அந்நியச் செலாவணி கையிருப்பை பலப்படுத்தவும், நாணயத்தின் மதிப்பை காப்பாற்றவும் அமெரிக்காவிடம் இருந்து 10 பில்லியன் டாலர் மதிப்பிலான அவசரகால நிதி உதவியைக் கோரியுள்ளது.
ஈரான் போர் தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ததைத் தொடர்ந்து, இந்த நிதி உதவியை பெற அந்நாடு விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்காக அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்துடன் வர்த்தக ரீதியிலான உறவுகளை பாகிஸ்தான் வேகப்படுத்தியும் வருகிறது.
ஒருவேளை அமெரிக்கா இந்த நிதி உதவிக்கு ஒப்புதல் அளித்தால், அது பாகிஸ்தானுக்கு உடனடி பொருளாதார நிவாரணமாக அமைவதுடன், சர்வதேச அளவில் அந்நாட்டின் கடன் தரத்தையும் உயர்த்த உதவும்.
அமெரிக்காவில் இருந்து லெபனானுக்கு விமானம் இயக்க அனுமதி
MOO அமெரிக்காவை சேர்ந்த விமான நிறுவனங்கள் லெபனானுக்கு விமானங்களை இயக்கலாம் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். லெபனான் அதிபர் ஜோசப் அவுனைச் சந்தித்த பின் பேசிய அவர், அமெரிக்கர்கள் லெபனானை பார்வையிடும் வகையில், அனைத்து அமெரிக்க விமான நிறுவனங்களும் லெபனானுக்கு நேரடியாக விமானங்களை இயக்க அனுமதிக்க உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.
ஏதென்ஸிலிருந்து ரோம் நகருக்குச் சென்ற விமானம், ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து, 1985-ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்க விமானங்களின் சேவை நிறுத்தப்பட்டன.
ஜெனரிக் மருந்துகள் மீது வரியை அதிகரிக்கும் அமெரிக்கா!
அடுத்த 2 ஆண்டுகளில், ஜெனரிக்(generic) மருந்துகளின் மீது கடுமையான இறக்குமதி வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். மருந்து உற்பத்தியை மீண்டும் அமெரிக்காவிற்கே கொண்டுவரும் நோக்கில், இறக்குமதி வரியை அதிகரிக்கப் போவதாக அவர் கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இரண்டு ஆண்டுகளுக்கு பூஜ்ஜிய சதவீத வரி மட்டுமே விதிக்கப்படும், அதன் பின் வரி விகிதம் ஓராண்டிற்கு 100 சதவீதமாகவும், பின்னர் 200 சதவீதமாகவும் உயர்த்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இதனால் இந்தியாவின் மருந்து ஏற்றுமதி பாதிக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
