தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கடந்த ஜூலை 18 ஆம் தேதி இரவு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விளாத்திகுளம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது மேடையில் பேசிய அவர், பேரவையை பூட்டினாலும் தமிழக முதலமைச்சர் விஜயின் எலும்பை உடைப்போம் என்று கூறியது அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார்கள் எழுந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், அவரை கைது செய்வதற்காக போலீசார் அவரது வீட்டிற்குச் சென்றனர். காவலர்கள் வந்திருப்பதை அறிந்த மார்க்கண்டேயன், வீட்டிற்குள் சென்று தயாராகி வெளியே வந்தார். அதன் பிறகு, காவல்துறையினர் அவரைத் தங்களது வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.
கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் தரப்பில் ஜாமீன் கோரி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி, அவரது ஜாமீன் மனுவை அதிரடியாக நிராகரித்து உத்தரவிட்டார். ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மீண்டும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நீதிமன்றத்தில் இருந்து வாகனத்தில் எறிச் செல்லும்போது தொண்டர்கள் எல்லாரும் ஹாப்பியாக இருங்கள் என திமுக எம்.எல்.ஏ. மார்கண்டேயன் கூறினார்.
