-நமது நிருபர்-
மேற்காசிய நாடான ஈரான் – அமெரிக்கா இடையேயான போரையடுத்து, ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச நாடுகளில் பெட்ரோலிய பொருட்கள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அமெரிக்காவிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, டீசல் பற்றாக்குறையால் விலை அதிகரித்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாட்டை போக்கவும், உள்நாட்டு விலை உயர்வை கட்டுக்குள் வைக்கவும், ரஷ்யாவிடம் இருந்து டீசல் இறக்குமதி செய்ய அமெரிக்கா முடிவு செய்தது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீதான போரால், ரஷ்யா மீது பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்திருந்தது. மேலும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதும் 100 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்கா கூறி வந்தது. தன் தேவைக்காக இந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை அமெரிக்கா நீக்கியது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேசினார்.
சமீபத்தில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் இறக்குமதி செய்ய அமெரிக்கா ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தத்தின்படி, ரஷ்யாவின் பிரிமோர்ஸ்க் துறைமுகத்தில் இருந்து மூன்று லட்சம் பீப்பாய்களுடன், 40,000 டன் டீசலை ஏற்றிக் கொண்டு மூன்று கப்பல்கள் அமெரிக்காவை நோக்கி புறப்பட்டன. இவை, வரும், நவ., 7ல் நியூயார்க் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த, 2023க்கு பின், ரஷ்யாவில் இருந்து அமெரிக்காவுக்கு மேற்கொள்ளப்படும் முதல் டீசல் வினியோகம் இதுவாகும். இதைத்தொடர்ந்து, அடுத்தகட்டமாக, நவம்பரில், ஐந்து லட்சம் டன்களும், அதன் பின், 10 லட்சம் டன்களும் அனுப்பப்படும் என தெரிகிறது.
ரஷ்யா உடனான டீசல் ஒப்பந்தம், அமெரிக்கா மற்றும் உக்ரைனில் விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் குறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறுகையில், “வலுவான நட்பின் பலவீனமான முடிவு”, என குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், “ரஷ்யாவுடனான போரை முடிவுக்கு கொண்டு வர நட்பு நாடான உக்ரைன் விரும்பவில்லை”, என தெரிவித்துள்ளார்.
