வாஷிங்டன்: நெல் அரைக்கும் போது அதில் இருந்து நீக்கப்படும் கடினமான உமிகளை துாக்கி எறியாமல் அல்லது எரிக்காமல், தற்போது அவற்றைக் கொண்டு வீடுகள் கட்டும் நிலையான கட்டுமானப் பொருட்கள் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு வருகின்றன.
அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான டன் அரிசி உமி, விவசாய கழிவுகளாக வெளியேற்றப்படுகிறது. இந்த திடமான விவசாய கழிவுப் பொருளில் இயற்கையிலேயே பூச்சிகள் மற்றும் காலநிலைகளில் இருந்து பாதுகாக்கக்கூடிய தன்மைகள் உள்ளன. இதன் காரணமாக அதை பயன்படுத்தி அமெரிக்க மக்கள் தற்போது வீடுகளை கட்டி வருகின்றனர்.
நெல் உமியில், `சிலிக்கான், லிக்னின்’ என்ற வேதியியல் பொருட்கள் உள்ளதால் உறுதியான மற்றும் நெகிழ்வு தன்மை கொண்ட கட்டுமான பொருளாக மறு பயன்பாடு செய்யப்படுகிறது. நெல் உமியை கட்டுமான பொருளாக மாற்றும் முறை எவ்வாறு பயன்பாட்டுக்கு வந்தது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
அமெரிக்காவின் யுட்டாவில் உள்ள பார்க் சிட்டியில் அமைந்துள்ள ஒரு ஆடம்பர பனிசறுக்கு விளையாட்டு பகுதியில், ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு தொகுப்பை புதுப்பிக்கும் பணிக்கு டேவிட் பைன் என்பவர், 2023ல் நியமிக்கப்பட்டார்.
அவருக்கு அங்கிருந்த கட்டட தேவைகள் சவாலாக இருந்தன. அந்நகரில் பெய்யும் பனிப்பொழிவின் காரணமாக அங்குள்ள குடியிருப்புகள் சேதமடைந்திருந்தன. நீண்ட குளிர் காலத்தில் அங்கு பல மாதங்களாக குவியும் பனியால் வீடுகளின் சுவர்கள் மட்டுமின்றி, அதன் கதவுகள், தரைகள் உள்ளிட்டவையும் சேதங்களை சந்தித்திருந்தன.
மேலும், கடுமையான கோடை காலங்களில் அச்சுறுத்தும் காட்டு தீயிற்கும் நிலைத்து நிற்கும் மற்றும் ஈரப்பதத்தை உறிஞ்சும் ஒரு கட்டுமான பொருளை தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
பல பொருட்களை பரிசீலித்ததுடன், ஆய்வும் செய்தனர். இறுதியில் அவர்கள் ஒரு விசித்திரமான தீர்வை கண்டறிந்தனர். நெல் உமியால் செய்யப்பட்ட பலகைகள், மரத்தைப் போல அழகாக இருந்ததுடன், பாரம்பரிய மரச்சுவர்களை விட சற்றே சிறந்த தீயை தடுக்கும் திறன் கொண்ட ஒரு பொருளாக இருந்தது கண்டறியப்பட்டது.
நெல் உமியை நன்றாக பொடியாக்கி, அதை பி.வி.சி., அல்லது இயற்கை பிசின்களுடன் சேர்த்து அதிக வெப்பம் மற்றும் அழுத்தத்தில் அச்சு வார்ப்புகள் வாயிலாக பலகைகளாக உருவாக்கப்படுகின்றன. இயற்கை மரத்தைப் போல இவை நீரில் ஊறிப்போகாது; உப்பாது அல்லது அழுகாது. எனவே, பனி மற்றும் மழை காலங்களுக்கு மிகவும் ஏற்றது.
உமியில் இயற்கையாகவே சிலிக்கா அதிக அளவில் இருப்பதால் கரையான்கள் மற்றும் பூச்சிகளால் இதை சேதப்படுத்த முடியாது. மேலும், சிலிக்கா காரணமாக இவை எளிதில் தீப்பற்றாது. மரத்தை விட சிறந்த தீ பாதுகாப்பு கொண்டது. இயற்கை மரத்தை போன்றே இவற்றையும் தேவைக்கேற்ப அறுக்கவும், துளையிடவும், செதுக்கவும், வர்ணம் பூசவும் முடியும்.
வீட்டின் வெளிப்புற தளங்கள் மற்றும் முகப்புகளில், பால்கனி மற்றும் தோட்டத்தின் தரை பலகைகளாக பயன்படுத்தலாம். மேலும், வீட்டின் உட்புற சுவர்களில் அழகுபடுத்தல், ஒலியியல் கட்டுப்பாடு மற்றும் வெப்பக்கட்டுப்பாட்டுக்கு சுவர்களுக்கு இடையே நிரப்பியாகவும் பயன்படுகிறது.
முன்னர் கழிவு பொருளாகவும், ஏன் மாசுபடுத்தியாகவும் கூட பார்க்கப்பட்ட நெல் உமி தற்போது, நிலையான கட்டுமான பொருளாக பயன்படும் ஆற்றலுக்காக அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
அமெரிக்காவின் நுாற்றுக்கணக்கான புதிய வீடு கட்டுமானங்களில், இப்போது நெல் உமி பலகைகளை பயன்படுத்துகின்றனர். மேலும், முகப்புகள் முதல் விளையாட்டு மைதானங்கள் வரை நெல் உமி தயாரிப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆண்டு தோறும் 900 கோடி கிலோ அரிசி விளைவிக்கும் அமெரிக்காவில் நெல் உமி சில நேரங்களில் பயோமாஸ் எனப்படும் இயற்கை எரிவாயுவாகவும் மாற்றப்படுகிறது.
இருப்பினும், அதன் பின் மீதமுள்ள சாம்பலுக்கு எவ்வித பயன்பாடும் இல்லாமல் இருந்தது. தற்போது அதற்கும் ஒரு தீர்வு காணப்பட்டுள்ளது. நெல் உமி சாம்பலை சிமென்ட் தயாரிப்பிலும் மற்றும் சிமென்டுடன் கலக்கும் துணை பொருளாகவும் பயன்படுத்தும் வழிமுறையும் கண்டறியப்பட்டுள்ளது. உலகளாவிய கார்பன் உமிழ்வில் எட்டு சதவீத பங்கு வகிக்கும் சிமென்டிற்கு நெல் உமி சாம்பல் ஒரு மாற்றாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
காடுகளை அழித்து மரங்களை வெட்டுவதை தடுத்து, விவசாய கழிவாக துாக்கி எறியப்படும் உமியை வைத்து உருவாக்கப்படும் நீடித்த, பலமான பலகைகள் மரத்துக்கு மாற்றாக சிறப்பானதாக கண்டறியப்பட்டுள்ளது.
