சென்னை,
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில், கடந்த 22-ந்தேதி தாரணி என்ற பெண் தனது தோழியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் அரசுப் பேருந்து ஒன்று வேகமாக சென்றதால், தாரணி மற்றும் அவரது தோழி மீது மழைநீர் தெறித்துள்ளது.
இதனால் பேருந்தை நிறுத்தி, ஓட்டுநருடன் தாரணி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்த நிலையில், அவர்களிடம் த.வெ.க. அமைச்சர் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு, மிரட்டல் விடுக்கும் வகையில் தாரணி பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.
இதைத் தொடர்ந்து போலீசார் தாரணி மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவருக்கு அம்பத்தூர் கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில், சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து தாரணி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், சம்பவத்தன்று வாக்குவாதம் ஏற்பட்டபோது கோபத்தில் பேசிவிட்டதாகவும், அமைச்சருக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் கூறியுள்ள அவர், தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
