அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை?

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று சுமார் நான்கு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று (29.10.2026) மூன்றாவது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக, 8 தொழில் நிறுவனங்களுக்கான அனுமதி மற்றும் சமூக நீதி தொடர்பான கணக்கெடுப்புக்கான ஆணையம் அமைப்பது உள்ளிட்ட விவகாரங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது, ஒவ்வொரு துறையின் செயல்பாடுகள், அதிகாரிகளின் ஒத்துழைப்பு மற்றும் பொதுமக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து, அதிகாரிகள் இல்லாமல் அமைச்சர்களுடன் முதலமைச்சர் விஜய் தனித்தனியாக ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக முதல்வர் விஜய், “பொதுமக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு அமைச்சர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். 

பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அதிகாரிகளின் பணியிட மாற்றங்களில் அமைச்சர்கள் யாரும் தலையிடக்கூடாது. அமைச்சர்களின் பெயர்களைப் பயன்படுத்தியோ, அவர்களுடைய உறவினர்கள், உதவியாளர்கள், நண்பர்கள் அல்லது அவர்களுக்கு நெருக்கமான அதிகாரிகள் மூலமாகவோ லஞ்சம் மற்றும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. அமைச்சர்களின் உதவியாளர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமான அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

எனவே அமைச்சர்கள், அரசு அதிகாரிகளின் பணியிட மாற்றங்களில் எவ்விதமான தலையீடும் இருக்கக்கூடாது. இதுதொடர்பாகப் புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், புகார்கள் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் துறைகள் மாற்றப்படலாம்” எனக் கடுமையாக எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து, அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் வழங்கியுள்ள இந்த அறிவுறுத்தல்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளன.