அமைச்சர்களை விமர்சிப்பது அரசுக்கு எதிரான செயல் அல்ல: ஐகோர்ட் கருத்து

சென்னை: ‘அமைச்சர்களை விமர்சிப்பது, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் செயலாகாது’ என, சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

திண்டுக்கல்லை சேர்ந்தவர் வினோத் சூர்யகுமார். இவர், சமூக வலைதளங்களில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவர், சமீபத்தில் பழனி கோவில் நில விவகாரம் தொடர்பாக, ‘வீடியோ’ ஒன்று வெளியிட்டிருந்தார்.

இது, அறநிலையத்துறை அமைச்சர் ரமேசுக்கு எதிராக, அவதுாறு பரப்பும் வகையில் உள்ளது என, அமைச்சரின் உதவியாளர் கொடுத்த புகார் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், வினோத் சூர்யகுமாரை கைது செய்தனர்.

பொது அமைதியை குலைப்பது, கலவரத்தை துாண்டுவது. அச்சத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்து, ‘சைபர் கிரைம்’ போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமின் கோரி வினோத் சூர்யகுமார், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ். கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

ஜனநாயகத்தில் மாற்று கருத்து அல்லது எதிர்ப்பு குரல் மதிக்கப்பட வேண்டியது. அரசையோ அல்லது அதன் அமைச்சர்களையோ விமர்சிப்பதை, அரசுக்கு எதிரான குற்றமாகவோ அல்லது பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் செயலாகவோ கருத முடியாது.

அவதுாறாக அல்லது பொய்யான தகவல்களை வெளியிட்டிருந்தாலும், அது சட்டப்படி அவதுாறு குற்றம் மட்டுமே. புலன் விசாரணைக்குரிய குற்றம் அல்ல.

மனுதாரருக்கு எதிராக பதிவு செய்துள்ள பிரிவுகள், இதற்கு பொருந்தாது. எனவே, மனுதாரர், தினமும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்குகிறேன்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Source link