அமைச்சர் கீர்த்தனாவுடன் மோதலா; 'அதெல்லாம் பொய்' என்கிறார் ஜெகதீஸ்வரி

விருதுநகர்: ”நாங்கள் மகிழ்ச்சியாக, ஒற்றுமையாக செயல்படுகிறோம்,” என விருதுநகரில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீர்த்தனாவின் கையை உயர்த்திப்பிடித்து அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசுகையில் தெரிவித்தார்.

அமைச்சர்கள் கீர்த்தனா மற்றும் ஜெகதீஸ்வரி இடையே கருத்து வேறுபாடு உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அரசு விழாவில், தன் பெயருக்கு முன்னதாக, கீர்த்தனா பெயரை போட்டது குறித்து ஜெகதீஸ்வரி, மாவட்ட கலெக்டரிடம் கேள்வி எழுப்பிய வீடியோ வைரல் ஆனது. இருவருக்கும் இடையே மோதல் இருப்பதாக, சமூக வலைதளங்களில் தொடர்ந்து தகவல்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில் விருதுநகரில் நடந்த நிகழ்ச்சியில் இருவரும் பங்கேற்றனர். அப்போது அமைச்சர் கீர்த்தனாவின் கையை உயர்த்திப்பிடித்து அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசியதாவது: சில வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன். நான் உண்மையில் கீர்த்தனாவை என் உடன் பிறந்த சகோதரியாக நினைக்கிறேன்.

அவர் என்னை அக்காவாக நினைத்து தான் நாங்கள் இந்நாள் வரை பயணிக்கிறோம். அதற்கு சாட்சி தான் எங்களது ஒற்றுமை. இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. சகோதரி கொஞ்ச நாட்களாக விருதுநகரில் பல சேவைகளை செய்தார்கள் சமூக வலைதளங்களில் வருவதெல்லாம் பொய்.

சீண்டியவர்கள் சீண்டட்டும்; போற்றுபவர்கள் போற்றட்டும். நாங்கள் மகிழ்ச்சியாக, ஒற்றுமையாக செயல்படுகிறோம். இவர் என்னுடைய தங்கை. நாங்கள் இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் ஒற்றுமையுடன் தான் செயல்படுவோம். இது உறுதி. இவ்வாறு அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசினார்.

Source link