அமைதியாக, தனிமையில் இருக்க விரும்புகிறேன்: வைகோ 'திடீர்' அறிவிப்பு

சென்னை: ‘என் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம். நான் யாருக்கும் தெரியாமல், அமைதியாக, தனிமையில் இருக்க விரும்புகிறேன்,’ என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் செப்., 22ம் தேதி வைகோ பிறந்த நாளை அவரது கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். இந்த சூழலில், இந்த ஆண்டு, பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு வைகோ தடை போட்டுள்ளார்.

அவரது அறிக்கை:

நான் கடந்த 1944, செப்., 22ல் பிறந்தேன். ஆனால், எஸ்எஸ்எல்சி சான்றிதழில், பிறந்த நாள் மே 22 என குறிக்கப்பட்டுள்ளது. எனக்கு வாழ்த்து கூற விரும்புகிறவர்கள், பல நேரங்களில், மே 22ம் தேதி வாழ்த்துக் கூறுவர்.

கடந்த, 2002ல் அன்றைய பிரதமர் வாஜ்பாய், என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். நான் அவரிடம், ‘இன்று என் பிறந்த நாள் அல்ல. பள்ளியில் சேர்ப்பதற்காக, முன்னதாக உள்ள நாளான மே 22ஐ குறிப்பிட்டு விட்டனர்’ என்றேன்.

அவர் கவிஞர் அல்லவா; கணமும் தாமதிக்காமல், ‘ஒரு ஆண்டில் 365 நாட்கள் உள்ளன. அதில், ஏதாவது ஒரு நாள் உங்கள் பிறந்த நாளாக தானே இருக்கும். என் வாழ்த்துகள், அந்த நாளுக்கு போய் சேரட்டும்’ என்றார்.

எனக்கு தெரியாமலேயே, பல இடங்களில் செப்., 22ம் தேதியன்று என் பிறந்த நாளை, மதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு பிறந்த நாளை கொண்டாட, சென்னை எழும்பூரில், மண்டபத்தை பதிவு செய்து விட்டனர். மேலும், ‘வைகோ 83’ என்ற இலச்சினை தயாரித்துள்ளனர்.

ஆனால், என் மனதில் இந்த ஏற்பாடு உறுத்தலாகவே இருந்தது. எனக்கு பிறந்த நாள் விழா எடுப்பதை, நான் முற்றிலும் விரும்பவில்லை. இந்த ஆண்டு மட்டுமல்ல, நான் வாழும் காலம் வரையிலும், செப்.,22ம் தேதி, என் பிறந்த நாள் விழாவாக, மதிமுக தொண்டர்கள் நடத்தக் கூடாது என்பதை, திட்டவட்டமாக தெரிவிக்கிறேன்.

என் பிறந்த நாளன்று, யாரும் என்னை சந்திக்க முற்பட வேண்டாம்; அந்த நாளை, எங்காவது, பிறர் அறியா வண்ணம் அமைதியாக, தனிமையில் கழிக்க நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source link