அமைதி பத்திரத்தில் கையெழுத்திட மாட்டோம் மாணவர் சங்க தலைவர் நேஹா போரா உறுதி

புதுடில்லி: “டில்லி போலீசாரின் அமைதி பத்திரத்தில், நானும், மாணவர் சங்கமும் கையெழுத்திட மாட்டோம்; இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்,” என, அகில இந்திய மாணவர் சங்க தலைவர் நேஹா போரா தெரிவித்துள்ளார்.

தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, கடந்த 16ல் டில்லியில் கரப்பான்பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதில், பல்வேறு மாணவர் அமைப்பினர் பங்கேற்றனர். இடதுசாரி அமைப்பின் அகில இந்திய மாணவர் சங்க தலைவர் நேஹா போராவும் போராட்டத்தில் பங்கேற்றார். டில்லி போலீசாரால் அன்றைய தினம் கைது செய்யப்பட்ட அவர், பின் விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து, நேஹா போரா போராட்டங்களில் ஈடுபடுவதை தடுக்கும் பொருட்டு, அமைதியை பேணுவதற்காக சிறப்பு நிர்வாக மாஜிஸ்திரேட் முன் பிணைப்பத்திரம் ஒன்றை தாக்கல் செய்யுமாறு அவருக்கு டில்லி போலீசார் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். இதை எதிர்த்து நேஹா போரா தாக்கல் செய்த மனுவை டில்லி உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்தது. இது குறித்து நேற்று அவர் கூறியதாவது:

கடந்த 16ல் நடந்த போராட்டம், ஜனநாயகத்துக்கு எதிரானதல்ல. அப்படிப்பட்ட சூழலில், ஏன் இந்த அமைதி நோட்டீசை டில்லி போலீசார் வழங்கினர் என தெரியவில்லை. அவர்கள் பெண்கள் மீது தாக்குதல் நடத்தியதால் தான், இந்த போராட்டம் வன்முறையாக மாறியது-. அமைதியான முறையில் நடத்தப்பட்ட போராட்டம், எப்படி அமைதிக்கு குந்தகமாகும்?

தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டத்தை அமைதிக்கு எதிரான அச்சுறுத்தல் என முத்திரை குத்துவதை ஏற்க முடியாது. அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை. ஜனநாயக நாட்டில், அரசை கேள்வி கேட்பதற்கும், போராடுவதற்குமான உரிமையை கட்டுப்படுத்தவே இந்த அமைதி பத்திரம் முறை பயன்படுத்தப்படுகிறது.

இந்த அமைதி பத்திரத்தில், நானும், அகில இந்திய மாணவர் சங்கமும் கையெழுத்திட மாட்டோம். சிறப்பு நிர்வாக மாஜிஸ்திரேட் முன் நடைபெறும் விசாரணை இயற்கை நீதியின் அடிப்படையில் இருக்க வேண்டும். விசாரணையில், எனக்கு எதிராக பயன்படுத்தப்படும் ஆவணங்களை வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு நிர்வாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்கை எதிர்கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link