அம்பாசமுத்திரம் தொகுதியில் நாதக சார்பில் சீமான் போட்டி: இடைத்தேர்தலில் நான் பொதுவேட்பாளர் என அறிவிப்பு – ntk seeman is candidate for ambasamudram constituency byelection

அம்பாசமுத்திரம் தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

அம்பாசமுத்திரம் தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். முன்னதாக அந்த தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா ராஜினாமா செய்து, தன்னை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் இன்று நெல்லையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக தெரிவித்தார்.

தவெகவில் இணைந்த அதிமுகவினர்

கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுகவில் உட்கட்சிப் பூசல் ஏற்பட்டது. இதனால் தவெக அரசின் மீது நடைபெற்ற நம்பிக்கை தீர்மானத்தில் அதிமுக எம்எல்ஏ-க்கள் எஸ். பி. வேலுமணி மற்றும் சீ. வி. சண்முகம் தலைமையில் ஒரு அணியாகப் பிரிந்து, தமிழக வெற்றிக் கழகத்திற்கு அரசு அமைக்க ஆதரவு அளித்தனர். அதனைத் தொடர்ந்து மதுராந்தகம் மற்றும் தாராபுரம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்களான மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர் தங்கள் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

அடுத்தடுத்து விலகல்

அதனைத் தொடர்ந்து அண்ணா திராவிட கட்சியின் முக்கிய புள்ளிகளான அம்பாசமுத்திரம் தொகுதியின் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா, விராலிமலையில் சட்டமன்ற உறுப்பினர் சி. விஜயபாஸ்கர், கரூர் சட்டமன்ற எம். ஆர். விஜயபாஸ்கர் ஆகியோரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

முன்னர் தமிழ்நாடு முதல்வர் வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து 6 அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் தங்களது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், 7 தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு, அதில் 2 தொகுதிகளான மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விரைவில் மீதமுள்ள 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் இந்த் சூழலில், சீமான் தன்னை அம்பாசமுத்திரம் வேட்பாளராக அறிவித்துள்ளார்.

நான் பொதுவேட்பாளர்

தேர்தலுக்கு முன்னதாக தவெக அழுத்தம் கொடுக்கும் வகையில், நாம் தமிழர் கட்சியின் சீமான் அம்பாசமுத்திரத்தில் அனைத்துக் கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளராக அறிவிக்கப்படலாம் என கூறப்பட்டு வந்தது. இந்த சூழலில் பொதுவேட்பாளராக போட்டியிடுவது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, நான் பொதுவேட்பாளர் தான் என அவர் அறிவித்தார்.

எல்லோருக்குமானவன் நான்

மரம், செடி, கொடி, ஆடு, மாடு, இயற்கை மற்றும் மனிதர்களில் அந்த சாதி, மதம் என அனைத்திற்கும் பொதுவானவர்கள் உள்ளனர் என்றால் அது நாம் தமிழர் கட்சியினர் தான். அப்படி பார்த்தால் எல்லோருக்குமான நான் பொதுவேட்பாளர் என அவர் தெரிவித்தார்.

Source link