நான் இல்லாவிட்டாலும் திருச்சி இடைத்தேர்தலில் தி.மு.க-வினர் தீவிரமாக வேலை செய்வார்கள்: கே.என்.நேரு

தி.மு.க முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்கள் இல்லங்களில் இன்று காலை முதல் 8 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவடைந்தது. இச்சோதனையில் முக்கிய ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை எனக் குறிப்பிட்ட கே.என்.நேரு, மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைத் திசைதிருப்பவே என் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியதாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தி.மு.க முதன்மைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்கள் ரவிச்சந்திரன் மணிவண்ணன் ஆகியோர் இல்லங்கள் மற்றும் அலுவலகங்களில் இன்று காலை 7 மணி முதல் துவங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் சோதனை 8 மணி நேரத்திற்கு பிறகு மாலை 2.30 மணி அளவில் நிறைவு பெற்றது.

திருச்சியில் நடைபெற்ற இந்தச் சோதனையில் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ஹேமச்சந்திரா தலைமையில் 15-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மூன்று பொலிரோ வாகனங்களில் வந்த அதிகாரிகள், நேருவின் இல்லத்தில் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனை சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது.

சோதனையின்போது முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சோதனையின்போது அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கூடுதல் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாக வேண்டியுள்ளது.

KN Nehru

8 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனை தற்போது நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தங்களது வாகனங்களில் ஏறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சோதனை தமிழக  அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோதனையின் முடிவில் அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணங்கள் குறித்தோ, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தோ அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் பட்சத்தில், இந்த விவகாரத்தில் மேலும் பல்வேறு திருப்பங்கள் ஏற்படலாம்.

KN Nehru

திருச்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அதிரடி ரெய்டுக்கு பிறகு திருச்சி தில்லை நகரில் தி.மு.க முதன்மைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்; தமிழகத்தில் கொலை கொள்ளை என சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை திசைத்திருப்பவே இந்த சோதனை நடைபெறுகிறது. நான் இங்கு இல்லாவிட்டாலும் திருச்சி கிழக்கு இடைத் தேர்தலில் தி.மு.க-வினர், தொண்டர்கள் எந்த தொய்வும் இன்றி வேலை செய்வார்கள். தி.மு.க வெற்றி தோல்வி கண்டு சுனக்கம் கொண்டதில்லை. என்னிடமிருந்து எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை. 2 லேப்டாப் மட்டும் எடுத்துச் சென்றனர். தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தி.மு.க எந்த அளவுக்கு முன்னணிக்கு வந்துள்ளதோ அதேபோல் நாங்கள் தொய்வு இல்லாமல் வெற்றியை நோக்கி மட்டுமே நகருவோம். ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் எத்தனையோ வழக்குகள் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர் மீது போடப்பட்டபோது எப்படி எதிர்கொண்டோமோ அதேபோல இந்த ஆட்சியிலும் எதிர்கொள்வோம்.

காமராஜர் எதிர்ப்பு தி.மு.க, எம்.ஜி.ஆர் எதிர்ப்பு தி.மு.க, ஜெயலலிதா எதிர்ப்பு தி.மு.க, விஜய் எதிர்ப்பு தி.மு.க என தி.மு.க-வை எதிர்ப்பவர்கள் வேண்டுமானால் மாறலாம். ஆனால், தி.மு.க எப்பொழுதும் ஒரே போல நிலைத்து நிற்கும்” என்று கே.என்.நேரு பேசினார்.

செய்தி: க.சண்முகவடிவேல் – திருச்சி

Source link