சுமார் 8 நாட்களாக சிறையில் இருக்கும் அவரைச் சந்தித்து நலம் விசாரித்த பின், உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்தார். ”சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் மார்க்கண்டேயன் அவர்கள் சிறையில் மிகவும் தைரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்” என்று குறிப்பிட்டார். இந்தச் சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர் ”இந்த அரசைப் பற்றித் தவறாகப் பேசிவிட்டால் உடனடியாக வழக்குத் தொடர்ந்து மிரட்டுகின்ற பணியைத்தான் தற்போது செய்து கொண்டிருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும், எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் வழக்குத் தொடர்வதையே இந்த அரசு தங்களின் முழு நேர 24 மணி நேர வேலையாகச் செய்து வருகிறது. தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆளுங்கட்சியின் நிர்வாகிகள் மீதே, அவர்களின் சொந்தக் கட்சிக்காரர்களே பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். இதுகுறித்துத் தான் ஏற்கனவே சட்டமன்றத்திலேயே பேசியும், இந்த அரசு அதற்குச் செவி சாய்க்கவில்லை. தன் சொந்தக் கட்சியினர் தரும் புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், எதிர்க்கட்சியினரை முடக்குவதிலேயே அரசு குறியாக இருக்கிறது” என்றார்.
