தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே புதர் மண்டி கிடந்த, 10 கி.மீ., பாசன வாய்க்காலை, அரசு வழங்கிய பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தி, டீசல் செலவு, ஆட்கள் கூலி என அனைத்து செலவுகளையும் தாங்களே ஏற்றுக்கொண்டு, 25 நாட்களில் துார்வாரி விவசாயிகள் அசத்தியுள்ளனர்.
தஞ்சாவூர் அருகே, சக்கரசாமந்தம் கிராமத்தில், உள்ள கள்ளப்பெரம்பூர் ஏரியில் இருந்து பாசனத்துக்குத் தண்ணீர் செல்லும் வாய்க்கால்கள், புதர்கள் மண்டி கிடந்ததால், தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், பாசனத்துக்குத் தண்ணீர் கொண்டு வர முடியாமல், விவசாயிகள் சிரமம் அடைந்தனர்.
இதையடுத்து, வாய்க்கால்களை துார்வாரி பாசனத்துக்குத் தண்ணீர் கொண்டு வர முடிவு செய்த விவசாயிகள், நீர்வளத்துறை சார்பில், துார்வாரும் பணிக்கு பொக்லைன் இயந்திரம் வாடகையின்றி வழங்கப்படுவதை அறிந்தனர். தொடர்ந்து, தஞ்சாவூர் எம்.எல்.ஏ., விஜய்சரவணன் உதவியுடன், நீர்வளத்துறை அதிகாரிகளை சந்தித்து, ஒரு பொக்லைன் இயந்திரத்தை பெற்றனர்.
ஆனால், இயந்திரத்தை இயக்குவதற்கான டீசல் செலவு, பணியாளர்களுக்கான கூலி உள்ளிட்ட செலவுகளை ஏற்க வேண்டியிருந்தது. இதற்காக, விவசாயிகள் ஒன்றிணைந்து, நிதி திரட்டி, தாங்களே களத்தில் இறங்கினர். இதன் பயனாக, 25 நாட்கள் தொடர்ந்து பணியாற்றி, 10 கி.மீ., நீளமுள்ள பாசன வாய்க்கால்களை துார்வாரி முடித்துள்ளனர்.
தங்களது வயல்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த பாசன பகுதிகளுக்கும் தண்ணீர் கிடைக்க வேண்டும் என்ற பொதுநல நோக்கில் விவசாயிகள் மேற்கொண்ட இந்த முயற்சி, பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
அரசு இயந்திரத்தின் உதவியுடன், தங்களது சொந்த நிதியையும் உழைப்பையும் செலுத்தி, பாசன வாய்க்காலை சீரமைத்த விவசாயிகளின் ஒற்றுமை, மற்ற கிராம விவசாயிகளுக்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளதாக பேசப்பட்டு வருகிறது.
