சென்னை: தமிழகத்தின் பொருளாதார நிலை குறித்த, 2025 – 26 நிதியாண்டின் உத்தேச பொருளாதார ஆய்வறிக்கையை, பா.ம.க., நேற்று வெளியிட்டது.
அதில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசின் வருவாய், எதிர்பார்த்ததை விட குறைந்துள்ளது. கடந்த 2024 – 25ல், பொருளாதார வளர்ச்சி 10.83 சதவீதம் அளவுக்கு அதிகரித்தாலும், அரசின் வருவாய் உயரவில்லை.
மத்திய அரசின் வரி வருவாய் பங்கு, மானிய உதவி ஆகியவையும் குறைந்ததால், மொத்த வருவாய் வரவுகளும் குறைந்துள்ளன.
இதுபோல, 2025 – 26 நிதி ஆண்டில், மொத்த வருவாய் 2 லட்சத்து 91,219 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இது இலக்கை விட, 12.17 சதவீதம் குறைவு.
தற்போது, 6,000 கோடி ரூபாய் பயிர்க் கடன் தள்ளுபடி, 200 யூனிட் இலவச மின்சாரம், 717 மதுபான கடைகள் மூடல் ஆகிய நடவடிக்கைகளால், அரசின் வருவாய் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும்.
வரும் 2026 – 27 நிதி ஆண்டின் முடிவில், அரசின் நேரடி கடன், பொதுத்துறை நிறுவனங்களின் கடன் இரண்டையும் சேர்த்தால், அரசின் மொத்த கடன், 16.75 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும்.
இதனால், ஒவ்வொருவரின் பெயரிலும், தலா 2 லட்சத்து 14,743 ரூபாய் கடன் இருக்கும். அரசின் நிதி நிலையை மேம்படுத்த, அனைத்து துறைகளுக்கான நிர்வாக செலவுகள் 15 சதவீதம் வரை குறைக்கப்பட வேண்டும்.
முதல்வர் தவிர, மற்ற அமைச்சர்கள், மாநிலத்திற்குள் விமான பயணம் மேற்கொள்ள தடை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
