அரசு வாகனம் முதல் தனி அலுவலகம் வரை.. ஜான் ஆரோக்கியசாமி நியமனத்தை மறைப்பது ஏன்? ஆர்டிஐயில் மழுப்பிய அதிகாரிகள் – why is john arogyasamy appointment being kept under wraps tn government rti response raises questions

தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வியூக வகுப்பாளராக அறியப்படும் ஜான் ஆரோக்கியசாமி, 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக வெற்றி பெற்ற பிறகு முதல்வர் விஜய்யின் அலுவலகத்தில் சிறப்பு பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக கடந்த ஜூன் மாதம் முதல் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஆனால், இந்த நியமனம் தொடர்பாக இதுவரை தமிழக அரசு சார்பில் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்போ அல்லது அரசாணையோ பொதுவெளியில் வெளியிடப்படவில்லை என கூறப்படுகிறது. முதல்வரின் சிறப்பு பிரிவு அதிகாரி நியமிக்கப்படுவது அரசு நிர்வாகத்தில் வழக்கமான நடைமுறையாக இருந்தாலும், ஆரோக்கியசாமியின் நியமனம் தொடர்பான முறையான ஆவணம் வெளியிடப்படாத நிலையில், அவருக்கு அரசு வாகனம் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ வசதிகள் வழங்கப்படுவதாக வெளியாகும் தகவல்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.

ஆர்டிஐ கேள்விக்கு அதிகாரிகள் அளித்த பதில்

இந்த விவகாரம் தொடர்பாக, ஜூலை மாதம் ஆரோக்கியசாமியின் நியமனம் குறித்த விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டு தகவல் கோரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு அரசு தரப்பிலுள்ள தகவல் அலுவலர் அளித்த பதிலில், அரசுஆவணங்களில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களை மட்டுமே வழங்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், யூகங்களின் அடிப்படையிலான தகவல் கோரிக்கைகள், கேள்விகள், விளக்கங்கள் அல்லது புதிதாக தகவல்களை உருவாக்கி வழங்குவதற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வழிவகை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பதில், ஆரோக்கியசாமியின் நியமனம் தொடர்பாக அரசு ஆவணங்களில் என்ன பதிவாகியுள்ளது என்ற கேள்வியை மேலும் முக்கியத்துவம் பெறச் செய்துள்ளது.

ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்திய சிறப்பு அதிகாரி நியமனம்

முன்னதாக, முதல்வர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் என குறிப்பிடப்பட்ட ரத்தன் பண்டிட், முதல்வரின் சிறப்பு பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்டதாக வெளியான தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த நியமனம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த பின்னணியில், தற்போது முதல்வரின் அரசியல் ஆலோசகராக செயல்படுவதாக கூறப்படும் ஆரோக்கியசாமி தொடர்பான நியமனமும் கவனம் பெற்றுள்ளது.

அரசு விளக்கம் அளிக்குமா?

ஆரோக்கியசாமிக்கு அரசு வாகனம், பாதுகாப்பு உள்ளிட்ட அதிகாரப்பூர்வ வசதிகள் வழங்கப்படுவதாகவும், முதலமைச்சர் அலுவலகத்திற்கு அருகிலேயே அவருக்காகதனி அலுவலகவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக அரசின் சார்பில் செலவுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால், அவரது நியமனம் தொடர்பான அரசாணை அல்லது அதிகாரப்பூர்வ ஆவணம் ஏன் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சவுமியா அன்புமணி கேள்வி…பதில் சொன்ன அமைச்சர் ராஜேஷ்

அதேபோல், ஆர்டிஐ மூலம் நியமனம் குறித்து தகவல் கோரப்பட்ட நிலையில், அதற்கு முழுமையான விவரங்கள் வழங்கப்படாதது ஏன் என்ற கேள்வியும் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. இதற்கு தமிழக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகுமா என்பதே தற்போது கவனிக்கப்படும் விஷயமாக உள்ளது.

Source link