அப்போது அவர், “ஒன்றிய பா.ஜ.க அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு நீட் தேர்வு வினாத்தாள் வெளியானதால் மீண்டும் மறுதேர்வு என்கிற நிலைமை ஏற்பட்டு நாடு முழுவதும் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போயிருக்கிறார்கள். இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும். அவர் ராஜினாமா செய்யவில்லை என்றால் பிரதமர் மோடி, தர்மேந்திர பிரதானை மத்திய அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும். டெல்லியில் போராடிய மாணவர்கள் மீதும் இளைஞர்கள் மீதும், கொடூரமான தாக்குதலை நடத்தி நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் இருக்கிறார்கள். நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்த கொடூரமான தாக்குதலுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்னிறுத்தி தொடர்ச்சியாக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் என்பது நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களின் சார்பில் இரவு முழுக்க ‘விழித்தெழு நாடே விழித்தெழு’ என்கிற முழக்கத்தோடு போராட்டத்தை அமைதியாக நடத்துவது என்கிற அறிகூவல் விடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரை இந்த போராட்டத்தை நடத்துவது என்று நாங்கள் தீர்மானித்து, காவல்துறை உயரதிகாரிகளும் அதற்கு அனுமதி அளித்திருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் 25க்கு மேற்பட்ட இடங்களில் இத்தகைய இரவு போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் எங்கேயுமே இத்தகைய பிரச்சனைகள் என்பது எழவில்லை.
விழுப்புரம் நகரத்தில் மட்டும் இங்கே இருக்கக்கூடிய காவல் துறையினர் அமைதியான முறையில் போராட்டத்திற்கு ஒன்று கூடிய தலைவர்களை, ஊழியர்களை கடுமையான முறையில் தாக்கி அராஜகமான முறையில் அனைவரையும் கைது செய்து இப்போது மண்டபத்தில் வைத்திருக்கிறார்கள். விழுப்புரம் மாவட்ட காவல்துறை மட்டும், தமிழ்நாடு காவல் துறைக்கு அப்பாற்பட்டு தனித்து செயல்படுகிறதா? தனித்து அதிகாரம் பெற்றிருக்கிறதா? என்கிற கேள்வியை நான் எழுப்ப விரும்புகிறேன். ஆகவே இத்தகைய அராஜகமான நடவடிக்கைக்கு காரணமான விழுப்புரம் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உடனடியாக தமிழ்நாடு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே நாங்கள் அறிவித்தபடி 10 மணி வரை இந்த போராட்டம் இங்கே நடைபெறும். மண்டபத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட அனைவரும் இங்கே வரவேண்டும். அதை தவிர வேறு எந்தவிதமான கோரிக்கையும் எங்களுக்கு இல்லை. ஆகவே மாவட்ட காவல்துறை காவல் துறையுடைய உயர் அதிகாரிகளுடைய பேச்சுக்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டுமே தவிர நீங்கள் அத்துமீறி நடந்து கொண்டால் எங்களுடைய நடவடிக்கை வேறு மாதிரியாகத்தான் இருக்கும். ஆகவே கைது செய்யப்பட்ட அனைவரும் உடனடியாக இந்த மைதானத்துக்கு கொண்டு வந்து சேர்ப்பது காவல்துறையினுடைய பொறுப்பு. அதுவரை எங்களுடைய போராட்டம் தொடர்ந்து நடைபெறும்” என்று கூறினார்.
