சென்னை: அரிசி, மளிகை பொருட்களின் விலை திடீரென அதிகரித்து வருவதால், பொது மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
மாநிலத்தின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு அரிசி உற்பத்தி இல்லை.
தமிழகத்தின் தேவைக்காக, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து அரிசி விற்பனைக்கு எடுத்து வரப்படுகிறது.
அண்டை மாநிலங்களில் அரிசி உற்பத்தி குறைந்துள்ளதுடன், பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியும் அதிகரித்து வருகிறது.
பதுக்கல்
வரும் நாட்களில், ஏற்றுமதிக்கு அதிகளவில் அரிசி தேவைப்படுவதால், ‘ஆன்லைன்’ விற்பனையாளர்கள் வாயிலாக பதுக்கல் அதிகரித்துள்ளது. உற்பத்தி குறைவு மற்றும் பதுக்கல் காரண மாக, அரிசி விலை கிடுகிடு வென உயர்ந்து வருகிறது.
கடந்த ஜூன் மாதத்தை விட, ஒரு கிலோ பொன்னி புழுங்கல் அரிசி, அதிகபட்சமாக 9 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இதேபோல, மிளகாய், தனியா விலையும் வேகமாக உயர்ந்து வருகிறது.
கடந்த மாதம், 260 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ குண்டு மிளகாய், தற்போது 320 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. நீட்ட மிளகாய், 280 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தாறுமாறு
கடந்த மாதம், 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தனியா, தற்போது 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
முதல் தர பூண்டு, கடந்த மாதம் 200 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. புளி விலையும் கிலோவிற்கு 40 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
கடந்த மாதம் 180 ரூபாய்க்கு விற்ற புளி தற்போது, 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. உளுத்தம் பருப்பு 120 ரூபாயில் இருந்து 150 ரூபாய்க்கும், கடலை பருப்பு 80 ரூபாயில் இருந்து 100 ரூபாயக்கும், துவரம் பருப்பு 130 ரூபாயில் இருந்து 140 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ சர்க்கரை, கடந்த மாதம் 41 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது, 10 ரூபாய் உயர்த்தப்பட்டு, 51 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அரிசி மற்றும் மளிகை பொருட்களின் விலை உயர்வால், தாறுமாறாக மாத குடும்ப செலவு உயர்ந்து வருவதால், பொது மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
வியாபார போட்டி
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட அரிசி ஆலைகளின் ஆலோசகர் முனுசாமி கூறியதாவது:
தென் மாநிலங்களில் நெல் சாகுபடி பரப்பு, 10 சதவீதம் குறைந்துள்ளது.
இதனால், நெல் தேவை அதிகரித்து வருகிறது. மாநிலம் விட்டு மாநிலம் சென்று நெல் கொள்முதல் செய்யும் பணியில், அரிசி ஆலை உரிமையாளர்கள் ஆர்வம் காட்ட துவங்கிஉள்ளனர்.
இதுவே அரிசி விலை உயர்வதற்கு, பிரதான காரணமாக அமைந்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால், அரிசி விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அடுத்த ஆண்டு மே, ஜூன் மாதங்களுக்கு பின் தான் அரிசி விலை குறையும்.
ஆனால், கிலோ 60க்கு குறைவாக விற்பனை செய்வதற்கு வாய்ப்பில்லை. வியாபார போட்டி காரணமாக, அரிசி விலையை கணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

