இடாநகர்: அருணாச்சல பிரதேசத்தில், புதிய அணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்புப் போராட்டம், வன்முறையில் முடிந்தது. இதில், இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் உட்பட மூன்று பேரின் வீடுகளை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள், அங்குள்ள தேசிய நீர்மின் சக்தி அலுவலகம் மற்றும் போலீஸ் ஸ்டேஷனை தீயிட்டு கொளுத்தினர்.
வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில், முதல்வர் பெமா காண்டு தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு, பிரம்மபுத்ரா ஆற்றின் துணை நதியான சியாங்கின் குறுக்கே, 1.13 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் பிரமாண்ட அணை கட்டும் பணி மேற் கொள்ளப்பட்டுள்ளது.
அபாயம்
தேசிய நீர் மின் சக்தி கழகம் சார்பில் 11,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் கட்டமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு 4,700 கிலோவாட் மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திபெத்தில் சியாங் ஆற்றின் மேற்பகுதியில், நம் அண்டை நாடான சீனா, 60,000 மெகாவாட் திறன்கொண்ட, ‘மேடாக்’ அணை கட்டும் திட்டத்தை வேகப்படுத்தியுள்ளது.
இதற்கு பதிலடி தரும் வகையில், மத்திய அரசு இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. எனினும், அருணாச்சலில் வசிக்கும் பழங்குடியின மக்கள், இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த அணை கட்டப்பட்டால், சியாங் பள்ளத்தாக்கில் உள்ள தங்கள் பூர்வீக கிராமங்கள், விளை நிலங்கள் முற்றிலும் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது என குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்தத் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், இந்த விவகாரம் தொடர்பாக கைதான, 10 சமூக ஆர்வலர்களை விடுவிக்கக்கோரியும் நேற்று முன்தினம் இப்பகுதி மக்கள், 12 மணி நேர முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
போராட்டம்
இந்த முழு அடைப்புப் போராட்டம், வன்முறையாக மாறியது. பாசிகாட் பகுதியில் உள்ள தேசிய நீர்மின் சக்தி கழகத்தின் உள்ளூர் அலுவலகம் மற்றும் போலீஸ் ஸ்டேஷன் ஆகியவற்றை போராட்டக்காரர்கள் சூறையாடியதுடன் தீயிட்டு கொளுத்தினர்.
இதுதவிர, இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பா.ஜ., மாநில தலைவர் கலிங் மோயோங் ஆகியோரின் வீடுகளையும் போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர். இந்த வன்முறை சம்பவத்தில், ஐந்து போலீசார் காயமடைந்தனர்.
