அர்னாப் புயலால் கடல் சீற்றம்; எண்ணுாரில் ஊருக்குள் புகுந்த தண்ணீர்

சென்னை: வங்கக்கடலில் உருவான ‘அர்னாப்’ புயல் ஆந்திராவில் கரையை கடக்கும் நிலையில், நேற்றிரவு சென்னை எண்ணுார் பகுதியில் கடல் சீற்றம் அதிகரித்து, ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

வங்கக் கடலில் உருவான ‘அர்னாப்’ புயல், இன்று அதிகாலை ஆந்திராவில் கரையைக் கடக்கும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், நேற்றிரவு 8:00 மணியளவில், சென்னை எண்ணுார் பகுதியில் கடல் சீற்றம் அதிகரித்தது. பாரதியார் நகர் முதல் தாழங்குப்பம் வரை ஆக்ரோஷ அலைகள் எழுந்தன. இந்த அலைகள் தடுப்புக் கற்களை தாண்டி, 10 அடி உயரத்திற்கு மேல் எழும்பி, எண்ணுார் கடற்கரை சாலையை தாண்டி, பாரதியார் நகர், நேதாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்குள் நுழைந்தது.

சீற்றம் காரணமாக, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள், சாலையோர கடைகள் எல்லாம், கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டன. அலையில் சிக்கி, இரு சக்கர வாகனங்களில் விழுந்து எழுந்தனர். பலர் வாகனங்களை விட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர்.

அலையின் சீற்றத்தை பார்த்து, மீண்டும் சுனாமி போன்ற பாதிப்பு ஏற்பட்டுவிட்டதோ என, அப்பகுதி மக்கள் ஓட்டம் பிடித்தனர். தொடர் சீற்றத்தால், எண்ணுார் விரைவு சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, கத்திவாக்கம் நெடுஞ்சாலை வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன.

Source link