அர்னாப் புயல் இன்று உருவாகிறது; 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

சென்னை: ‘வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்வதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், ‘அர்னாப்’ புயல் இன்று உருவாகும்’ என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை: தமிழகத்தில் நேற்று காலை நிலவரப்படி, திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தில் அதிகபட்சமாக 20 செ.மீ., மழை பெய்து உள்ளது. இதற்கு அடுத்தபடியாக, அதே மாவட்டம் நெடுங்குணத்தில் 18; கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் 17; கள்ளக்குறிச்சி முடியனுார், விழுப்புரம் நொளம்பை, தர்மபுரி மாவட்டம் பிக்கிலி பகுதிகளில் தலா 16; தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல், பெரம்பலுார் தழுதமலை, நுாத்தப்பூர் பகுதிகளில் தலா 14 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

கரையை கடக்கும்

மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. பின்னர், மணிக்கு 8 கி.மீ., வேகத்தில் நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வேகம் 5 கி.மீ.,யாக குறைந்தது. இதன் நகர்வு வேகம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, ‘அர்னாப்’ புயலாக இன்று மாறலாம். நாளை தீவிர புயலாக மாறி, ஆந்திரா, ஒடிஷா இடையே கரையை கடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

16 மாவட்டங்களில்…

புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அந்த மாவட்டங்களுக்கு, ‘ஆரஞ்ச் அலெர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மழை எச்சரிக்கை ரேடார் திடீர் பழுது

சென்னை வானிலை ஆய்வு மையம், செயற்கைக்கோள் வரைபடங்கள் வாயிலாக மட்டுமல்லாது, ‘டாப்ளர் ரேடார்’ பயன்படுத்தியும், மழை குறித்த எச்சரிக்கைகளை வழங்கியது. சென்னை துறைமுக நிர்வாக அலுவலக கட்டடத்தின் மேல்தளத்தில் வைக்கப்பட்டுள்ள அந்த ‘டாப்ளர் ரேடார்’ நேற்று திடீரென பழுதானது. வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2002ம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த ரேடாரை முழுமையாக மாற்ற வானிலை ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது. தற்போது ரேடார் பழுதான நிலையில், காரைக்காலில் உள்ள ரேடார் வாயிலாக மழை எச்சரிக்கை தகவல்கள் பெறப்படுவதாக, வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை பள்ளிக்கரணை தேசிய கடலியல் ஆய்வு நிறுவனம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா இஸ்ரோ மையம் ஆகியவற்றிலும் ரேடார் கருவிகள் உள்ளன. இவற்றின் வாயிலாகவும் சென்னைக்கான மழை எச்சரிக்கை தகவல்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

35 இடங்களில் நிலச்சரிவு

‘தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், 35 இடங்களில் நிலச்சரிவு மற்றும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது’ என, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
* கனமழை காரணமாக, 173 இடங்களில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டன
* மலைப்பகுதிகளில் 35 இடங்களில் நிலச்சரிவு மற்றும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது
* நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு தமிழக பேரிடர் மேலாண்மை படையின் இரண்டு அணிகள், தேசிய பேரிடர் மேலாண்மை படையின் இரண்டு அணிகள் அனுப்பப்பட்டுள்ளன
* ஊட்டி, நீலகிரி, கொடைக்கானல் போன்ற இடங்களில் நிலச்சரிவு மற்றும் பாறைகள் விழும் அபாயம் உள்ளது
* திண்டுக்கல், கொல்லிமலை, நாமக்கல், கல்வராயன் மலை, கள்ளக்குறிச்சி, ஏலகிரி மலை, திருப்பத்துார், ஏற்காடு மலைகள், சேலம், திருவண்ணாமலை, வால்பாறை மலைகள், கோவை ஆகிய இடங்களில் மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source link