அர்னாப் புயல் எதிரொலி : சென்னையில் கடல் சீற்றம்!

அர்னாப் புயல் காரணமாக சென்னையில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது எண்ணூர் அதனைச்  சுற்றியுள்ள பகுதிகள்,  பாரதி நகர் பேருந்து நிறுத்தம் போன்ற பகுதிகளில் கடல் அலைகள் சுமார் 200 மீட்டர் தூரம் வரை ஆக்ரோஷமாக எழுந்து கரையைத் தாக்கி வருகின்றன. இதையடுத்து, 30-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், அப்பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

அதேபோல், கடல் சீற்றத்தைப் பொருட்படுத்தாமல் செல்ஃபி எடுக்க முயற்சிக்கும் பொதுமக்களை காவல்துறையினர் எச்சரித்து, அங்கிருந்து அப்புறப்படுத்தி வருகின்றனர். போக்குவரத்துக் காவல்துறையினரும் தொடர்ந்து தங்களது பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாலை 7 மணி அளவில் தொடங்கிய கடல் சீற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடற்கரையில் பாதுகாப்பிற்காகக் கொட்டப்பட்டுள்ள பெரிய கற்கள் மீது கடல் அலைகள் ஆக்ரோஷமாக மோதுகின்றன. இதனால், கடற்கரைச் சாலையில் கடல் நீர் புகுந்து, சிறிய கற்கள், கடல் தாவரங்கள் மற்றும் குப்பைகள் உள்ளிட்டவை சாலை முழுவதும் பரவிக் காணப்படுகின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் அச்சம் நிலவுகிறது. 

பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சுமார் 200 மீட்டர் தூரம் வரை போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் உள்ள கடைகளும் மூடப்பட்டுள்ளன. கடல் சீற்றம் தொடர்ந்து நீடித்து வருவதால், பொதுமக்கள் யாரும் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என காவல்துறையினர் எச்சரித்து வருகின்றனர். இரவு முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.