வங்கக்கடலில் தீவிரமடைந்த அர்னாப் புயல், நேற்று (28-10-26) ஒடிசா மற்றும் ஆந்திரக் கடற்கரைப் பகுதிகளில் கரையைக்கடந்தது. இதன் காரணமாக, கரையோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன், கன மழை கொட்டி தீர்த்தது.
இந்த புயல் வீசும் சமயத்தில், கனமழை பெய்துகொண்டிருந்த இக்கட்டான சூழலில், ஒடிசாவில் மொத்தம் 931 குழந்தைகள் பாதுகாப்பாகப் பிறந்துள்ளன. பிறந்த குழந்தைகளுக்கு, இந்த புயலை நினைவு கூறும்விதமாக பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. அதன்படி, ஆண் குழந்தைகளுக்குப் புயலின் பெயரான ‘அர்னாப்’ மற்றும் ‘தூபான்’ என்றும், பெண் குழந்தைகளுக்கு ‘வர்ஷா’ மற்றும் ‘பதாசி’ என்றும் பெற்றோர் பெயரிட்டுள்ளனர்.
இந்த புயலின் தீவிரத்தை உணர்ந்த ஆந்திரா மற்றும் ஒடிசா அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வந்தன. அதன் ஒரு பகுதியாக, புயல் பாதிப்பிற்குள்ளாகும் நிலையிலிருந்த பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளிலிருந்த 2,245 கர்ப்பிணிப் பெண்கள் பாதுகாப்பாகப் பல்வேறு மருத்துவமனைகளுக்கும், ’மா கிருஹா’ போன்ற தங்குமிடங்களுக்கும் மாற்றியது.
இவர்களில் 931 பெண்களுக்குப் புயல் காலத்தின் போது வெற்றிகரமாகப் பிரசவம் நடந்துள்ளது. தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் நலமாக இருப்பதாக ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி தெரிவித்துள்ளார். மேலும், அந்த குழந்தைகளுக்குச் சூட்டப்பட்ட ’அர்னாப்’ என்ற பெயருக்குச் சமஸ்கிருதத்தில் ’கடல்’ அல்லது ’பரந்த நீர்நிலை’ என்று பொருள் என்று கூறப்படுகிறது.
