“அறிவு என்பது நமது பிறப்புரிமை… சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும்”

நீட் விவகாரம் நாடு முழுவதும் பெரும் விவாதங்களையும், போராட்டங்களையும் தூண்டியுள்ளது. குறிப்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் முன்னெடுத்த அமைதி போராட்டமும் அவர்களை வன்முறையால் கையாண்ட காவல் துறையினரின் நடவடிக்கையும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. டெல்லியில் தொடங்கிய போராட்டம் தற்போது நாடு முழுவதும் பரவி பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நீட் தேர்வை ரத்து செய்யவும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமெனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.  

நாளுக்கு நாள் போராட்டம் விரிவடைந்து வரும் நிலையில் அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைப்பில் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் எழுப்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஆர்பாட்டம் நடந்தது. இதில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர், லெனின் பாரதி, மன்சூர் அலிகான், நடிகர் கலையரசன், பாடகர் அறிவு, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்ட பல்வேறு திரையுலகினர் கலந்து கொண்டனர். இவர்களோடு நடிகை ஆண்ட்ரியாவும் கலந்து கொண்டார். 

அப்போது மேடையில் பேசிய ஆண்ட்ரியா, “என்னுடைய வாழ்க்கையில் இதுதான் முதல் போராட்டம். கடந்த ஒரு வாரமாக இந்த விஷயத்தை நான் ஃபாலோ செய்கிறேன். தூரத்தில் இருந்தாலும் எமோஷ்னலாக எல்லாரும் ஒன்றிணைந்திருக்கிறோம். எனக்கு மிகவும் பிடித்த ரவீந்திரநாத் தாகூரின் கவிதையிலிருந்து சில வரிகளை மட்டும் இங்கு சொல்கிறேன். ‘எங்கே மனது அச்சமின்றி இருக்கிறதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ, எங்கே அறிவு அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கிறதோ… அந்தச் சுதந்திர சொர்க்கத்தில், என் தந்தையே, என் தேசம் விழித்தெழட்டும்’.

அறிவு இலவசமாகக் கிடைக்கவேண்டும். அந்த ஒரு காரணத்திற்காகத்தான் நாங்கள் போராடிக்கொண்டு இருக்கிறோம். அறிவு என்பது நமது பிறப்புரிமை. அதை இந்த சிஸ்டம் நம் மாணவர்களுக்குப் புறக்கணிக்கிறது என்றால் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும். நான் மாணவர்களின் பக்கம் எப்போது நிற்பேன்” என்றார். 

Source link