சென்னை: பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசியதாக, அ.தி.மு.க.,எம்.பி.,யும் முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ளும்படி, மாநில மகளிர் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரத்தில் நடந்த அ.தி.மு.க., பூத் கமிட்டி பயிற்சி கூட்டத்தில், பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில், சண்முகம் பேசியிருந்ததாக கூறி, சென்னையைச் சேர்ந்த பிரமிளா, ராதிகா ஆகியோர், மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தனர்.
புகாரை விசாரித்த ஆணையம், சி.வி.சண்முகத்துக்கு ‘சம்மன்’ அனுப்பியது. விசாரணைக்கு ஆஜராகவில்லை எனக் கூறி, அவருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க, டி.ஜி.பி.,க்கு மகளிர் ஆணையம், கடந்தாண்டு நவ., 11ல் உத்தரவிட்டது.
இதை ரத்து செய்ய கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுவை, நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா விசாரித்தார். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் முகமது ரியாஸ் ஆஜரானார்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
விதிகளின்படி, மாநில மகளிர் ஆணையம் தலைவர் மற்றும் ஐந்து உறுப்பினர்களை கொண்டுள்ளது. ஆனால், மனுதாரருக்கு எதிராக அனுப்பப்பட்ட சம்மன், டி.ஜி.பி.,க்கு வழங்கப்பட்ட பரிந்துரையில், தலைவர் மட்டுமே கையெழுத்திட்டு உள்ளார். இது, சட்டப்படி நிலைக்கத்தக்கது அல்ல. குற்றச்சாட்டுகளை ஆராய்ந்ததில், அது வெறுப்பு அல்லது பெண்களை இழிவுபடுத்துவதாகக் கருத முடியாது.
இவ்வாறு கூறிய நீதிபதி, மாநில மகளிர் ஆணைய உத்தரவை ரத்து செய்தார்.
