– நமது நிருபர் –: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை, நேற்று அதிகாலை வரை கொட்டி தீர்த்தது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடானது.
கிருஷ்ணகிரி பழைய பேட்டை டவுன் பஸ் ஸ்டாண்டில் தண்ணீர் தேங்கியதால், பயணியர் அவதிப்பட்டனர்.
நேதாஜி சாலையில் பாதாள சாக்கடை பணியால் சேறு, சகதியாக மாறியது. தொடர் மழையால் சவுட்டஹள்ளி கொட்டாயில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. ஜெக்காரப்பள்ளியில் 1 டன் நெல் மூட்டைகள் சேதமாகின.
மக்கள் கட்டிய பாலம்
சோக்காடி ஊராட்சி சவுட்டஹள்ளி கொட்டாய் கிராமத்துக்கு செல்லும் வழியின் குறுக்கே ஆற்று கால்வாயில், இரு ஆண்டுகளுக்கு முன், மக்கள் சேர்ந்து, 8 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டிய தரைப்பாலம், வெள்ளப்பெருக்கால் அடித்து செல்லப்பட்டது. அங்கு, உயர்மட்ட பாலம் கட்டித்தர மக்கள் வலியுறுத்தினர்.
ஜெக்காரப்பள்ளியில் தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், தனியார் இடத்தில் 31 ஆயிரம் டன் நெல் சேமித்து வைத்திருந்தனர்; மழையால், 1 டன் மூட்டைகள் நனைந்து சேதமாகின; சில மூட்டைகளில் நெல் நாற்று முளைக்கத் தொடங்கியுள்ளது.
இதை அறிந்து ஆய்வு செய்த கலெக்டர் தினேஷ்குமார், சேதமான மூட்டைகளை அரவை ஆலைக்கு அனுப்பினார்; மீதி மூட்டைகள், தார்ப்பாயால் மூடப்பட்டன.
மழையால், கே.ஆர்.பி., அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 1,300 கன அடியாக இருந்த நீர் வரத்து, நேற்று 2,382 கன அடியாக அதிகரித்தது.
நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால், மூன்று சிறு மதகு மூலம் தென்பெண்ணையாற்றில் வினாடிக்கு 2,220, பாசன கால்வாயில் 162 என, 2,382 கன அடி நீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
இதனால், சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில், தென்பெண்ணையாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஒன்பது பேர் மீட்பு
கடலுார் மாவட்டம், தொழுதுார் அணை நிரம்பியதால், நேற்று அதிகாலை 5:00 மணியளவில் அணையிலிருந்து திறக்கப்பட்ட நீரால், பெரம்பலுார் மாவட்டம், லப்பைக்குடிகாடு கிராம வெள்ளாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதில், செல்வா, 36, கிருஷ்ணமூர்த்தி, 24, ராஜாராம், 35, தினேஷ், 23, வரதராஜ பெருமாள், 24, கார்த்திக், 26, உட்பட ஒன்பது பேரை ஆற்று வெள்ளம் சூழ்ந்தது. பெரம்பலுார் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், ஒரு மணி நேரம் போராடி அவர்களை பத்திரமாக மீட்டனர்.
சேலம் மாவட்டம், ஏற்காடில் சில நாட்களாக அதிக அளவில் மழை பெய்வதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
வரும் நாட்களில் அதிக மழை பொழிவுக்கு வாய்ப்புள்ளதால், சுற்றுலா பயணியர் ஏற்காடு வருவதை தவிர்க்க வேண்டும் என, கலெக்டர் இளம் பகவத் அறிவுறுத்தி உள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கலசப்பாக்கம் அடுத்த பூவாம்பட்டு கிராம ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறுகிறது. இதனால், பானாம்பட்டு பகுதியை ஒட்டி, 100 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கி சேதமடைந்துள்ளன.
அமைச்சர் ஆய்வு
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், திருவிடைமருதுார் பகுதிகளில் பெய்த மழையால் பந்தநல்லுார், நெய்க்குப்பை உள்ளிட்ட பகுதிகளில், 50 ஏக்கரில் சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
திருவிடைமருதுார் பகுதி விவசாயிகளிடம் பயிர்கள் நிலை குறித்து, வேளாண் துறை அமைச்சர் வினோத் கேட்டறிந்தார்.
புதுச்சேரியில் நேற்று முன்தினம் மாலை 5:30 மணி முதல் நேற்று காலை 8:30 மணி வரை, 9.7 செ.மீ., மழை பதிவானது. தொடர் கனமழையால், நகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்திரா சதுக்கம், ராஜிவ் சதுக்கம், சிவாஜி சிலை சிக்னல் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. புதுச்சேரி, காரைக்கால் துறைமுகத்தில், 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
