ஆகஸ்ட் 1 முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய டோக்கன்- நெரிசலை குறைக்க ரெயில்வே நடவடிக்கை

தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய நீங்கள் முன்பதிவு மையத்திற்குச் சென்றால், ஆதார் அட்டை அல்லது பிற செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டையை வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ரெயில் பயணிகள் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு மையங்களில் எளிதாகவும், நெரிசலின்றியும் பெறுவதற்காக இந்திய ரெயில்வே ஒரு புதிய டோக்கன் முறையைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக மேற்கு மத்திய ரெயில்வே மண்டலத்தில் அறிமுகம் செய்யப்படும் இந்த புதிய நடைமுறை, வருகிற ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

கூட்ட நெரிசல்

வழக்கமாக தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் நேரங்களில், ரெயில் நிலைய முன்பதிவு மையங்களில் கடுமையான கூட்ட நெரிசலும் தள்ளுமுள்ளும் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. இதனைத் தவிர்க்கும் பொருட்டு, தட்கல் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய வரும் பயணிகளுக்கு முதலில் ஒரு டோக்கன் வழங்கப்படும். பின்னர், அந்த டோக்கன் வரிசை எண்களின் அடிப்படையில் அவர்களின் முறை ஒதுக்கப்பட்டு, பயணச்சீட்டுகள் தடையின்றி முன்பதிவு செய்யப்படும்.

இதனால், கவுண்டரில் ஏற்படும் தள்ளுமுள்ளு மற்றும் நீண்ட வரிசைகளால் ஏற்படும் சிரமம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆவணங்கள்

தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய நீங்கள் முன்பதிவு மையத்திற்குச் சென்றால், ஆதார் அட்டை அல்லது பிற செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டையை வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும், பயணிகளின் பெயர்கள், வயதுகள் மற்றும் பயணம் தொடர்பான அனைத்து தகவல்களையும் முன்கூட்டியே தயாராக வைத்திருக்க வேண்டும். இது டிக்கெட் முன்பதிவு செயல்முறையை விரைவுபடுத்த உதவும்.

புதிய நடைமுறை வருகிற 1-ந்தேதி முதல் அமலுக்கு வருவதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source link