லண்டன்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடக்கும் வன்முறை சம்பவங்களுக்கு சர்வதேச அளவில் கவலை எழுந்துள்ளது. போராட்டம் நடத்தியவர்களுக்கு எதிராக ஆயுதங்களை பயன்படுத்தியது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என ஆம்னெஸ்டி அமைப்பு மற்றும் பிரிட்டன் எம்பி நாஸ் ஷாவும் கூறியுள்ளனர்.
துப்பாக்கிச்சூடு
பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில், சட்டசபையில் அகதிகளுக்கான இட ஒதுக்கீடு, விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் கடந்த ஜூன் 5ம் தேதி முதல் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த போராட்டங்களில் 80க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். அப்பகுதியில் நேற்று( ஜூலை 27) தேர்தல் நடந்தது. இதில் பல இடங்களில் வன்முறை, முறைகேடு உள்ளிட்டவை நடந்தன.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வரும் ஜே.ஏ.சி.சி., எனப்படும் அவாமி அதிரடி கூட்டுக்குழு, தங்களின் கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகளை நிறைவேற்றப்படாததை கண்டித்து தேர்தலை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். பேரணியில் ஈடுபட்டனர். அதில் உள்ளூர் மக்களும் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தை ஒடுக்குவதற்காக அவர்கள் மீது பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச்சூடு நடத்தின. இதில் ஜேஏஏசி நிர்வாகிகள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 400க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
கண்டனம்
அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் தெற்காசியப் பிராந்தியத் தற்காலிக இயக்குநர் இசபெல் லஸ்ஸி கூறியதாவது: ஆக்கிரமிப்பு கஷ்மீரில் போராட்டக்காரர்களுக்கு எதிராக பாகிஸ்தான் நிகழ்த்திய துப்பாக்கிச்சூடு என்பது அந்நாட்டின் சட்டவிரோதமான வன்முறைகளின் வரலாற்றுடன் ஒத்துப் போகிறது. பாதுகாப்புப் படையினரின் அதிகார துஷ்பிரயோகம் குறித்து விரைவான, சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இணைய சேவை துண்டிப்பு காரணமாக வெளி உலகுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இணையம் மற்றும் அலைபேசித் தொடர்பு சேவைகளை மீட்டெடுக்க வேண்டும். ஊடகங்கள் மற்றும் பார்வையாளர்களுக்குத் தடையற்ற அணுகலை வழங்கபடுவது முக்கியம். ஜேஏஏசி அமைப்பு மீது விதிக்கப்பட்ட தடையால், பதற்றங்கள் தீவிரமடைந்துள்ளது. பாகிஸ்தான் அதிகாரிகள் இந்தத் தடையை நீக்குவதுடன், அந்த அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் குரலை ஒடுக்கவோ அல்லது தன்னிச்சையாகக் கைது செய்யவோ கூடாது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். போராட்டக்காரர்களுக்கு எதிராக பலத்தை பயன்படுத்துவதற்கு இந்தத் தடையை ஒரு நியாயமாகப் பயன்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.
கொடூரமானது
பிரிட்டன் எம்பி நாஸ் ஷா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அப்பாவி மக்களை கொன்றது முற்றிலும் கண்டனத்திற்குரியது. அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது கொடூரமானது. இந்த சம்பவத்திற்கு பொறுப்பு ஏற்கவும், வன்முறைக்கு கண்டனம் தெரிவிக்கவும், பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அதிகாரிகளிடம் பேசுவேன். பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மனித உரிமை அமைப்பும் கவலை தெரிவித்துள்ளார்.
